பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் சேர்க்க மறுத்தது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அரசுப் பள்ளியில் அவர் கேட்ட பிரிவில் சேர்க்கப்பட்டார்.
வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான் பகுதி விவசாய கூலி தொழிலாளி திருப்பதியின் மகள் டி. திவ்யா (16). இவர் 65 சதவீத மாற்றுத் திறனாளி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அடுத்தவர் உதவியுடன் தேர்வு எழுதி 75 சதவீத மதிப்பெண் பெற்றார். இவர் வாடிப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1-ல் கம்ப்யூட்டர் அறிவியல் பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தார். ஆனால் மாற்றுத்திறனாளி என்பதால் திவ்யாவுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ.ஆஞ்சலோ இருதயசாமிக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார். இது தொடர்பான செய்தி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது.
இந்நிலையில் ‘தி இந்து’ நாளிதழ் செய்தியை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக நேற்று விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் பதிவுத் துறை சார்பில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘நீதிமன்றம் பல வழக்குகளில் மாணவர்களுக்கு அவர் வசிப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் இடமிருந்தால் மாணவர்களின் மதிப்பெண் அடிப் படையில் சீட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் இங்கு 65 சதவீத மாற்றுத்திறனாளி என்ற காரணத்துக்காகவும், தேர்வு எழுதுவதற்கு மற்றொரு உதவி தேவைப்படும் என்ற காரணத்தைக் கூறியும் மாணவிக்கு சீட் வழங்க மறுத்தது தவறு. பாதிக்கப்பட்ட சிறுமி வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர். இதுபோன்ற மா ணவர்களுக்கு நீதிமன்றம் உதவி செய்வது அவசியம் எனக் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நேற்று பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி நேரில் ஆஜராகி, பாதிக்கப்பட்ட மாணவி திவ்யாவுக்கு வாடிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அவர் கேட்ட கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். இதை பதிந்துகொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து உத்தரவிட்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவி திவ்யா தொடர்பாக ‘தி இந்து’ செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்த விவரம் தெரியவந்ததும், பகல் 12 மணியளவில் திவ்யாவுக்கு சீட் வழங்கப்பட்டு, அந்த விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment