கல்வி முறையில் மாற்றம், தரம் வேண்டும் என்பதில் யாருக்கும் சந்ேதகமில்லை. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் புதிய கல்வி கொள்கை வகுப்பதற்காக மத்திய அரசின் கேபினட் செயலராக இருந்த டிஎஸ்ஆர் சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2015ல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டிய அறிக்கையை நீண்ட ஆய்வுக்கு பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து அதன் பின் தான் சட்டமியற்றப்படும் என்றாலும், புதிய கல்வி கொள்கையின் பல பரிந்துரைகள் தற்போதே விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.
‘அடித்தளத்தில் இருந்தே திட்டமிடல்’ என்ற புதிய அணுகுமுறையுடன் 2.60 லட்சம் கிராமங்களில் கருத்து கேட்டு கொள்கை வகுப்பதற்கான பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் நடத்தமுடியாமல் போனது குழுவுக்கு ஏற்பட்ட ஆரம்ப சறுக்கல். அதை விட சறுக்கல், பல மாநில அரசுகள் கூட தங்களது நிலைப்பாட்டை இக்குழுவுக்கு தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஆய்வை முடித்து பரிந்துரைகளை இக்குழுவினர் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. தற்போது புதிய கல்விக்கொள்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் அமலுக்கு வரும்பட்சத்தில் கல்வியை வசப்படுத்துவதில் மத்திய அரசின் நிலையை புரிந்து கொள்ளமுடியும்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியபோது எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சமஸ்கிருதம் தனிப்பாடமாகவே இடம் பெறவேண்டும் என புதிய கல்வி கொள்கை பரிந்துரைக்கிறது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இருந்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் விலக்கு அளிப்பதை கை விட சொல்கிறது புதிய பரிந்துரை. எட்டாம் வகுப்பிலேயே தொழிற்பயிற்சியை கட்டாயமாக்கவேண்டும் என பரிந்துரைக்கிறது. தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வி முடித்ததற்கு இணையான சான்றிதழ் அளிக்க பரிந்துரைக்கிறது. இதனால் பள்ளியுடன் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்புக்கு செல்ல தேசிய அளவில் ஒரே நுழைவு தேர்வு நடத்தவேண்டும் என பரிந்துரைக்கிறது. மருத்துவ படிப்பில் சேர தேசிய நுழைவு தேர்வு முறைக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நுழைவு தேர்வு முறை என்பதே சமூக நீதி கோட்பாடுக்கு எதிரானது. நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து போக செய்யும் நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. உயர்கல்வி நிலையங்களில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் தடுக்கப்படவேண்டும். அதோடு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சுதந்திரமான செயல்பாடு, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால் கடந்த ஓராண்டில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம், சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு மையத்திற்கு தடை போன்றவற்றில் அரசியல் தலையீடுகள் எந்த ரூபத்தில் வந்தது என்பது யாவரும் அறிந்ததே. உயர்கல்வியில் தனியார்மயம், அன்னிய முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுப்ரமணியம் கமிட்டியின் மற்ற பரிந்துரைகள் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை. புதிய கல்வி கொள்கையும் மோடி அரசின் கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment