தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக,மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு, செயலர் சபிதா அளித்துள்ள விளக்கம் வருமாறு:
1,096 புதிய பள்ளிகளில், 845 பள்ளிகளுக்கு இன்னும் கட்டடப் பணிகள் முடியாதது ஏன்?
ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன; ஒரு ஆண்டில் முடித்து விடுவோம்.கடந்த, 2010 முதல், 2,031 பள்ளிகளை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
கழிப்பறை தவிர மற்ற பணிகளை மேற்கொள்ளவே இல்லையே?
கட்டுமான செலவு உயர்ந்து விட்டதால், 878 பள்ளிகளுக்கான திட்ட அனுமதியை, திரும்ப ஒப்படைக்கிறோம். மீதமுள்ளவற்றுக்கு, தேவைப்பட்டால் மறு ஒப்புதல் பெற்றுக் கொள்கிறோம்.(மறு ஒப்புதல் அளித்தாலும், கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்காது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்)தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34; காஞ்சிபுரம் - 58.57 சதவீதம் என முன்னணியில் உள்ளனவே?
சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள், தொழிற்சாலை, வணிக பகுதிகள் நிறைந்தவை. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும், தொழில் திறன் சார்ந்த படிப்புகளுக்காக, 8ம் வகுப்பு முடித்ததும், ஐ.டி.ஐ.,யில் படிக்கச் செல்வதால், 9, 10ம் வகுப்பில் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.
பள்ளிப் படிப்பு இடைநிற்றலை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?
அதற்காகத்தான், தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப், சைக்கிள்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனரே?
விடுதிகள், வாடகை கட்டடத்தில் இயங்குவ தால், இந்த நிலை உள்ளது. இனி, மத்திய அரசின் இலக்கை எட்டி விடுவோம்.
தமிழகத்தில், 10 சதவீத பகுதிகளில், 5 கிலோ மீட்டர் சுற்றளவில், உயர்நிலைப் பள்ளிகள் இல்லாதது ஏன்?
எதிர்காலத்தில் இந்த நிலை இல்லாமல், 5 கிலோ மீட்டருக்குள் பள்ளிகளை கொண்டு வருவோம்.
கடந்த, 2015ம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி, உயர்நிலைக் கல்வியின் தரம், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது ஏன்?
மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டப்படி, இந்த கணக்கெடுப்பு நடத்தியுள்ளதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களிடையே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம், ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010 - 11ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டங்களை துவங்காதது ஏன்; இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் தூங்குகிறதே?
இந்த திட்டத்துக்கான, 'டெண்டர்' விடுவதில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. விரைவில், பணிகளை துவங்கி விடுவோம்.
அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லையே?
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.
ஆதார் பதிவில், 34 சதவீத மாணவர்கள் இன்னும் சேர்க்கப்படாமல், தமிழகம் பின்தங்கியுள்ளது ஏன்?
இலக்கை எட்ட தேவையான முயற்சிகளை விரைவில் மேற்கொள்வோம்.
தமிழகத்தில் இதுவரை, 9, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் துவங்கவே இல்லை. மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியுள்ளதே?
நடவடிக்கை எடுக்கிறோம்; விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம். இவ்வாறு பள்ளிக் கல்வி செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளதாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
4 comments:
I got 90 above marks in yet .but no job.when yet case over.plz tell.
I got 90 above marks in yet .but no job.when yet case over.plz tell.
I got 90 above marks in yet .but no job.when yet case over.plz tell.
I got 90 above marks in yet .but no job.when yet case over.plz tell.
Post a Comment