காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (சிறுபான்மைப் பள்ளிகள் தவிர்த்து) 2016-17-ஆம் கல்வி ஆண்டுக்கான நுழைவுநிலை வகுப்புகளில் (அந்தந்தப் பள்ளிகளின்
நுழைவுநிலை வகுப்புகளில்) கட்டணமின்றி சேர்க்கை விண்ணப்பங்கள் பெற ஜூன் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் சுயநிதிப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும்.
இச் சட்டத்தின்படி ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்க்கை கோர முடியும். சேர்க்கை கோருபவரின் முகவரியானது பள்ளி இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ-க்குள் இருக்க வேண்டும்.
ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு பள்ளியானது விண்ணப்பதாரரின் இருப்பிடத்தில் இருந்து 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பள்ளியிலோ, அல்லது மேலே குறிப்பிட்ட அலுவலகங்களிலோ வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்ட மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment