அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கு ஊக்க ஊதியமாக ரூ. 80 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், அரசின் துறைத் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் ரூ.400 ஊக்க ஊதியமாக வழங்கப்படுகிறது. இதைப்போன்றே பொதுத் தேர்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணி, சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் உள்ள நிலையில், தேசிய நல்லாசிரியர் விருது தேர்வுக் குழு பட்டியல் கடந்த 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுரை வழங்கப்படும் நிலையில் இந்த முறை முன் கூட்டியே அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் ஜெயலானி, கலை ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment