மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது. இதனிடையே, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், "7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் நிதியாண்டில் (2016-17) அமல்படுத்தப்படும்' என்று அறிவிப்பு வெளியானது.
அதன் அடிப்படையில், தற்போது முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து துல்லியமாக எவருக்கும் தெரியாது என்றும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அரசுத் துறைச் செயலர்கள் குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அதுகுறித்து முழுமையாகத் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment