பொதுத்தேர்வு நடக்கும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மனநலமருத்துவர் பன்னீர்செல்வம் சில அறிவுரைகள் வழங்கினர்.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு நாளை 4ம் தேதியும் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வுகளும் துவங்க உள்ளன. தேர்வுகாலத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் பெற்றோர் பின்பற்றவேண்டியவை குறித்தும் நெல்லையை சேர்ந்த சினேகா மனநல மருத்துவனை தலைமை டாக்டர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தேர்வு காலத்தில் மாணவர்கள் பதட்டமில்லாத நிலையை கடைப்பிடிக்கவேண்டும். தேர்வுக்கு மூன்று வகையாக படிக்கலாம், கண்ணால் பார்த்து
புத்தகைத்தை படிப்பது, நாமே சத்தமாக படித்து கேட்பது, அல்லது பேசி பதிவு செய்து கேட்டுபடிப்பது, மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்துபடிப்பது ஆகிய மூன்று முறைகள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு எது சரியானதோ அதைப்பின்பற்றி படிக்கலாம். தேர்வுக்காக, ஞாபகசக்திக்கு என விற்பனைக்கு வந்துள்ள மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இவை ஒவ்வாமையைத்தான் ஏற்படுத்தும். இதற்காக வெளிநாட்டில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஞாபகசக்தி மாத்திரை தொடர்ந்து கொடுத்தும், இன்னொரு தரப்பு மாணவர்களுக்கு அதற்கு பதிலாக வெறும் சத்து மாத்திரை கொடுத்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனால் மாத்திரை உட்கொள்வதால் எந்த மாற்றமும் இல்லை என ஆய்வுமுடிவுகள் வந்துள்ளன. தேர்வு நெருங்கும் போது, டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் நீங்களாக ஏதாவது மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். இது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். தேர்வு தினத்தன்று காலை உணவை கட்டாயம் உட்கொள்ளவேண்டும். காலைசக்திதான், மூளையை தூண்டி ஞாபகசக்திக்கு வழிவகுக்கும்.
சிறிய ரிலாக்ஸ்க்கு தியானம், யோகா போன்றவற்றில் சிறிதுநேரம் ஈடுபடலாம். தேர்தல் காலத்தில் சிக்கன், மட்டன் போன்ற காரமான அசைவ உணவுகள், பொரித்த அசைவ உணவை தவிர்க்கவேண்டும். இதனால் மலச்சிக்கல் வரவாய்ப்புள்ளது. ஞாபகத்திறனை மேம்படுத்தும் ஓமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் சுரக்க கூடிய பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேர்வு தினங்களில் மாலையிலோ காலையிலோ ஒரு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபடலாம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோரும் உதவும் வகையில், அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேச்சுகொடுக்கலாம். ஒரு தேர்வு முடிந்ததும் அந்த தேர்வினை எப்படி எழுதியுள்ளோம் என அதற்கு மதிப்பெண் போட்டுக்கொண்டு விவாதங்களில் ஈடுபடாதீர்கள். தேர்வு அறைக்கு சென்றதும் பதட்டமடையாதீர்கள், பதட்டம் ஏற்பட்டால், மூளைக்கு செல்லவேண்டிய ரத்தஓட்டம், கை கால், உடல் என மற்ற பகுதிகளுக்கு ஓட்டம் பிடிக்கும்.இதனால் படித்தவை மறந்துபோகும் நிலை ஏற்படும்.
தேர்வுக்கு முந்தைய தினம் விடிய விடிய உட்கார்ந்து படிக்கும் வேலையை கைவிடுங்கள். தேர்வுக்கு தூக்ககலக்கத்துடன் சென்றால் தேர்வை முழுஈடுபாட்டுடன் எழுதமுடியாத நிலை ஏற்படும். எனவே தேர்வுக்கு செல்லும் முந்தின தினம் இரவில் கட்டாயம் 6 மணிநேரத்திற்கு குறைவில்லாமல் தூங்கவேண்டும்.
பெற்றோருக்கு அறிவுரைகள்
மாணவர்களை விட பிளஸ்2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்தான் அதிக டென்ஷனாகிவிடுகிறார்கள். மாணவர்களிடம் எதிர்மறையான பேச்சுக்களை கைவிடுங்கள். உங்கள் பேச்சு மாணவருக்கு தன்னம்பிக்கையை தரவேண்டும். டாக்டர், இன்ஜினியர் சீட் இல்லையென்றால் வாழ்க்கையே போய்விட்டதாக புலம்பாதீர்கள். மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
No comments:
Post a Comment