தமிழக அரசின் பாடநுால் கழக புத்தகங்களை, பெற்றோர், இனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. அரசின், 'இ - சேவை' மையங்களில், புக் செய்தால், மாணவர்களின் வீட்டிற்கே இலவச, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கியுள்ளது.
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகத்தின் சார்பில், சமச்சீர் கல்வி புத்தகங்கள், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த புத்தகங்களைத் தான், அரசு பள்ளிகள் முதல், தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரை, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பாட புத்தகங்களை வாங்க, சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை மையம், பள்ளிகளில் உள்ள பாடநுால் வினியோக மையத்தில் காத்து நிற்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாடநுால் கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெற்றோரை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க, அருகிலுள்ள இ - சேவை மையங்களுக்கு சென்றால், அங்கு பாடநுால் கழக புத்தக இருப்பு மற்றும் விலை விவரம் வழங்கப்படும்.
அதன்படி, புத்தக இருப்புக்கு ஏற்ப, தேவையான பாட புத்தகங்களை அதற்குரிய பணம் செலுத்தி, 'புக்' செய்யலாம். இந்த பதிவுக்கு, இ - சேவை மையத்தில் ரசீது வழங்கப்படும்; பின், வீட்டு முகவரிக்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்து பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், எந்த இ - சேவை மையத்திலும், முன்பதிவு செய்யலாம். பாடநுால் கழகம் நிர்ணயித்த விலையை மட்டுமே கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ளலாம். கூரியர் மூலம் இலவச டெலிவரி கிடைக்கும். கூரியருக்கோ, பதிவு செய்வதற்கோ கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மாணவர்கள், தங்களது பள்ளி பெயரை சொல்ல வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment