'பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் இந்தாண்டு தேர்வு ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ளது,' என தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். மதுரையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:அர்ச்சயா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி: எதிர்பார்த்தது போல் தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் நான்கு வினாக்கள் நன்றாக படிப்பவர் மட்டும் எழுதும் வகையில் இருந்தது.
பிற பகுதி வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்டவை. பாடல் வரிகள் கொடுத்து வினா எழுதுதல், இலக்கண பகுதி எளிதாக, எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தன. பள்ளியில் பல்வேறு ஆண்டு வினாத்தாள்களில் இருந்து அடிக்கடி தேர்வு நடத்தப்பட்டதால் இந்த தேர்வு எளிதாக இருந்தது.
அருண்குமார், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி: கல்வித்துறை
வழங்கிய வழிகாட்டி புத்தகத்தில் இருந்து பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண் வினா 16ல் 14 வினா 'புக்பேக்கில்' இருந்து இடம் பெற்றன. நெடு வினா
பகுதியில் அடிக்கடி எழுதிப்பார்த்த, எதிர்பார்த்த திருக்குறள், சிலப்பதிகாரத்தில் கேட்கப்பட்டது. இலக்கணமும் புக்பேக்கில் தான் கேட்கப்பட்டன. முழு மதிப்பெண் எளிதில் பெறலாம்.
யுவராணி, ஜோதி மேல்நிலைப் பள்ளி: வினாக்கள் அனைத்தும் புளுபிரிண்ட் அடிப்படையில் தான் கேட்கப்பட்டன. மனப்பாட பகுதி மேகம் விடு துாது, திருக்குறளில் இருந்து தான் இடம் பெற்றது. 14 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட இலக்கண குறிப்பு பகுதியை சாதாரண மாணவர்கள் கூட எழுதும் வகையில் கேட்கப்பட்டது. பள்ளிகளில் அடிக்கடி எழுதி பார்த்த வினாக்களே இடம் பெற்றன. அதிக மதிப்பெண் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது.
ஸ்ரீநிதி, ஸ்ரீமகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: ஆவலுடன் எதிர்பார்த்த மொழி வாழ்த்து, இறை வாழ்த்து பகுதியில் இருந்து தான் மனப்பாடப் பகுதி வினாக்கள் இடம் பெற்றன. நெடு வினாக்கள் அனைத்தும் முந்தைய வினாத்தாளில் இடம் பெற்ற வினாக்களாக இருந்தன. எங்களை நன்றாக தயார்படுத்தியிருந்தோம். தேர்வும் எளிதாக இருந்தது.
லதா, தமிழாசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒத்தக்கடை: 'புளு பிரிண்ட்' படியே வினாக்கள் கேட்கப்பட்டன. நான்கு மதிப்பெண் பகுதியில் நேரடியாக கேட்காமல் இடம்சுட்டி பொருள் விளக்கும்படி வினாக்கள் அமைந்தன. எட்டு மதிப்பெண் பகுதியில் தொடர்நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல் பகுதியில் கேட்கப்பட்டன. மாணவர்களும் இப்பகுதியை அடிக்கடி எழுதிப் பார்த்து பயிற்சி பெற்றிருந்தனர். இலக்கண பகுதியில் இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சிவிதியில் இருந்து இடம் பெற்ற வினாக்கள் ஏற்கெனவே
பல தேர்வுகளில் கேட்கப்பட்டருந்தவை தான். இதில் 99 சதவீதம் பேர் முழு மதிப்பெண் பெறுவர். மொத்தத்தில் இத்தேர்வில் சாதாரணமாக படிக்கும் மாணவர் கூட 70 மதிப்பெண்ணிற்கு மேல் எடுப்பார்கள்
No comments:
Post a Comment