குஜராத்தில், அரசு பணியாளர் தேர்வு, நேற்று நடந்ததை அடுத்து, மாணவர்கள், காப்பி அடிப்பதை தடுப்பதற்காக, நான்கு மணி நேரம், இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, சில மாதங்களுக்கு முன், அரசு பணியாளர் தேர்வு நடந்தபோது, கேள்வித்தாள்கள், சமூக வலைதளங்கள் மூலம் வெளியானது. இதுதொடர்பாக, 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கும் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, அம்மாநிலத்தில், ஆமதாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில், வருவாய்த்துறை அரசு பணியாளர் தேர்வு நடந்தது.
இதில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வில், மொபைல் போனை பயன்படுத்தி, காப்பி அடிப்பதை தடுக்கும் பொருட்டு, காலை, 9:00 முதல், பிற்பகல், 1:00 மணி வரை, இன்டர்நெட்டில், சமூக வலைதள இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன. இதனால், விடுமுறை நாளான நேற்று, அவற்றை பயன்படுத்து வோர் பெரிதும் அவதிப்பட்டனர்.
பாடம் கற்ற அரசு:கடந்த ஆண்டு, ஹர்த்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம் நடத்தினர். அப்போது, சமூக வலைதளங்கள் மூலமாக, வதந்தி பரவியதால், பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனால், குஜராத் அரசு மீது, கடும் விமர்சனம் எழுந்தது. இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட, குஜராத் அரசு, தற்போது, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment