ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுபவர்களுக்கு, வழங்கப்படும் வரி தள்ளுபடி, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தள்ளுபடி பெறுவதற்கு, வீட்டு வாடகையைத் தெரிவிக்கலாம். வீட்டு வாடகை வகையில் இதுவரை, ஆண்டுக்கு, 24,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.
இது, இந்த பட்ஜெட்டில், 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, முதல் முறையாக வீடு வாங்குவோர், 35 லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட வீட்டை வாங்கும் போது, அதற்கான கடனில், 50,000 ரூபாய் கூடுதல் வரி விலக்கு வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் உள்ள தனிநபர்களுக்கான கூடுதல் வரி, 12 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லா விட்டாலும், ஓரிரு சலுகைகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத ஊதியதாரர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில், அவர்களுக்கு, வீட்டு வாடகை படி தராத பட்சத்தில், ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை கிடைத்தது. அது, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது
-நாகப்பன், பொருளாதார நிபுணர்
உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.1,000 கோடியில் நிதி நிறுவனம்:நாடு முழுவதும் தொடக்கக் கல்வி பரவலாக்கப்பட்டதை அடுத்து, தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, சர்வ சிக் ஷாஅபியான் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அத்துடன், அடுத்த இரு ஆண்டுகளுக்குள், 62 மாவட்டங்களில், நவோதயா பள்ளிகள் துவக்கப்படும்.
உயர்கல்வி நிறுவனங்களை, உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்பிக்கும் மற்றும் ஆராய்ச்சி மையங்களாக உயர்த்துவதே, அரசின் லட்சியமாகும். அதன்படி, 10 பொது மற்றும், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்களை, உலகத்தரத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் உருவாக்கப்படும். இந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
டிஜிட்டல் வசதி:
மேலும், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'உயர்கல்வி நிதி நிறுவனம்' ஒன்று உருவாக்கப்படும். ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இந்த நிதி பயன்படுத்தப்படும். மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிப்போருக்கு உதவும் வகையில், மாணவர்களின் பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள், மதிப்பெண்கள், அவர்கள் பெற்ற பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்கும் வசதிஏற்படுத்தப்படும். இதன் மூலம், சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பாதுகாக்கப்படுவதோடு, எளிதாக கையாளவும் முடியும். பி.எப்., சலுகை:
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், அமைப்பு சார்ந்த துறைகளில், புதிதாக பணி அமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரின், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்திற்கான, 8.33 சதவீத பங்களிப்பு தொகையை, நிறுவனங்கள் சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு அரசே செலுத்தும். மாதச் சம்பளம், 15 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு இது பொருந்தும். இதற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தக துறையில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. மால்கள் போன்ற மிகப்பெரிய வர்த்தக வளாகங்கள், வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்குவதை போல, சிறு மற்றும் நடுத்தர கடைகளும் அனைத்து நாட்களிலும் இயங்க அனுமதிக்கப்படும்.
உயர்கல்வி படிக்க அதிக செலவாவதால், ஊரக மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க, 7.5 லட்சம் ரூபாய் வரை, எந்தவித உத்தரவாத ஆவணங்களும் இல்லாமல் கல்விக்கடனாக வழங்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களின் பின்புறம் அதற்கான தகவல்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவர் படித்து முடித்து வேலைக்கு செல்லும் போது, அந்த நிறுவனத்தின் மூலம் தானாகவே, கல்விக் கடனுக்கான பணத்தை தவணை முறையில் பிடிக்கலாம்.
-ஜெயப்பிரகாஷ் காந்தி,
கல்வி ஆலோசகர், சென்னை
No comments:
Post a Comment