பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன; அதன் விவரம் வருமாறு: மாணவியர் உள்ள தேர்வு அறைகளில், ஆண் ஆசிரியர்களை கண்காணிப்பாளராக பணி அமர்த்த வேண்டாம். ஆசிரியைகளை மட்டுமே, பணி அமர்த்த வேண்டும்
மாணவியரின் உடைகளை தொட்டு, எந்த ஆசிரியையும் சோதனை செய்யக் கூடாது
மாணவியரிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது
மாணவியர் மனம் தளரும் வகையில், கண்காணிப்பாளர் நடந்து கொள்ளக்
கூடாது தேர்வு அறைக்கு நிலையான படை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வந்தால், மாணவியர் பகுதியில், பெண் அதிகாரி மட்டுமே விசாரிக்கலாம்.
தவறான தகவலை பரப்ப கூடாது:இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவியர் காப்பியடிப்பது மற்றும் முறைகேடு என்பது மிக மிக குறைவான நிகழ்வு தான். ஆசிரியர், அதிகாரிகள் தேவையின்றி சந்தேகப்பட்டு மாணவியரிடம் சோதனை செய்யும் போது, அந்த மாணவி பற்றி, சக மாணவியரோ, மாணவரோ வெளியில் வந்து தவறான தகவல்களை பரப்பக் கூடும்.
கடந்த காலங்களில், இதுபோன்ற நேரங்களில், மாணவியர் விரக்தி அடைந்து, தற்கொலை உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மாணவியர் விஷயத்தில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படாதபடி நடந்து கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ஈவ் டீசிங்' தடுக்கப்படுமா?பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்வு முடிந்த கையுடன், போலீசார் அங்கிருந்து சென்று விடுவர். அதனால், தேர்வு எழுதி முடித்த மாணவர் மற்றும் மாணவியர், பள்ளி அருகிலேயே நின்று சண்டை போடுதல், மாணவியரை மாணவர்கள் கிண்டலடித்தல் போன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு எழுதிய, சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளி மாணவி ஒருவர், தேர்வு மையத்தின் முன், மற்ற மாணவர்களால், 'ஈவ் டீசிங்' செய்யப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள், இந்த ஆண்டு நடக்காமல், போலீசாரும், ஆசிரியர்களும் கடைசி வரை, தேர்வு மையத்தில் நின்று, மாணவ, மாணவியரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
No comments:
Post a Comment