தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஜன., 31ல் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சம்பந்தமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2,175 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'இப்பதவிகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்விற்கு, நாளை முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என, மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மின் வாரியத்தில் இதுவரை, அரசியல் சிபாரிசு, பணபலம் உடையவருக்கு மட்டும், வேலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில், ஊழியர் நியமன அறிவிப்பை, மின் வாரியம்
வெளியிட்டு உள்ளது. இன்னும், 10 நாட்களுக்குள், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் என்பதால், அரசியல் சிபாரிசுகள் ஏற்கப்படாது. எனவே, தேர்தல் முடிவதற்குள், யார் குறுக்கீடும் இன்றி தேர்வுகளில், திறமையை வெளிப்படுத்தும் நபருக்கு வேலை வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வேலைக்காக யாரும், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment