தமிழக பட்ஜெட் கூட்டம் இன்று (16 ம் தேதி ) காலை 11 மணிக்கு துவங்கியது . 2016 -17 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டுக்குஎதிர்ப்பு தெரிவித்து திமுக , தேமுதிக., காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
அவை துவங்கியதும், நிதி அமைச்சர் தனது பேச்சில் முதல்வர் ஜெ., வை வெகுவாக பாராட்டினார். அவரது பாராட்டுரையில் கூறியதாவது: நீங்கள் இதயமுள்ள இறைவனாக புவியில் பூத்தவர் , மக்கள் நலனை மனதில் நிறுத்தி எழுச்சி கொண்டவர், மாநிலம் மகிழும் வண்ணம் மகிழ்ச்சி தந்தவர், தேவை என்று கேட்கும் முன்னே உதவி செய்பவர், துன்பங்களை அழிக்கும் ஆற்றல் கண்டவர், இல்லை என்றே சொல்லே இல்லாதவர், சரித்திரத்தை மாற்றும் சக்தி கொண்டவர், உலகிற்கு வழி காட்டும் அறிவை பெற்றவர், நாடு போற்ற அம்மா என்ற பெயரை பெற்றவர், என்ன தவம் செய்தோம் உங்களை வணங்கிடவே, எப்போதும் விழித்திருப்பாம் நீங்கள் சொல்வதை செயல்படுத்த, ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதில் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60,610 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம் நாட்டிலேயே பொருளதார வளர்ச்சியில் 2 வது இடம் ( 8 .01 சதவீதம் ) பெற்றுள்ளதாகவும், மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டது தமிழக அரசின் சாதனை என்றும், தற்போது தமிழக அரசு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார் . காவிரி முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தியது, இலங்கை மீனவர்கள் மீட்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் சிறந்து விளங்குகிறது . சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திறமையான ஒருங்கிணைப்பால் மீட்பு பணிகள் நடந்து குறுகிய காலத்தில் இயல்பு வாழ்வு திரும்ப வழி செய்தது தமிழக அரசு என்றும் கூறினார்.
எதிர்கட்சியினர் வெளிநடப்பு: அவை துவங்கியதும், எதிர்கட்சியினர் திமுக, தே.மு.தி.க., காங்கிரஸ் இடதுசாரி மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தே .மு. தி. க., எம் எல் ஏக்களுக்கு அனுமதி: அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக சபாநாயகரால் தே .மு. தி. க., எம் எல் ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது . கோர்ட் அனுமதியின்படி தே .மு. தி. க., எம் எல் ஏக்களுக்கு தமிழக சட்டசபையில் அனுமதி அளிக்கப்பட்டது. எம்எல்ஏ,க்கள் 6 பேர் இன்று சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்றனர். இதற்கிடையில், தமிழக அரசு தரப்பில் இந்த ரத்து உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment