சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டார்.‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்....’’ என்று அவர் பேச தொடங்கியதும், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு நிறைய உறுப்பினர்கள் இதுபற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் என்னிடம் கொடுத்துள்ளனர். ஆய்வில் உள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.
உடனே தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று உடனே பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதே பிரச்சனைக்காக தே.மு.தி.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளும் எழுந்து நின்று அனுமதி கேட்டனர்.அதற்கு சபாநாயகர் யாரும் இதுபற்றி வற்புறுத்த முடியாது. பதில் வந்ததும் நான் அனுமதிக்கிறேன் என்றார்.என்றாலும் அதை ஏற்காமல் தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.வெளிநடப்பு செய்த பின்பு துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முயற்சிக்கும் போதெல்லாம் சபாநாயகர் பேச அனுமதிப்பது இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அதை தெரிந்து கொண்டுதான் இவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.சந்திரகுமார் (தே.மு.தி.க.):– அரசு ஊழியர் போராட்டத்தால் அரசு அலுவல்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. அவர்கள் கோட்டையை முற்றுகையிட்டு விடக்கூடாது என்பதற்காக ஏராளமான போலீசாரை நிறுத்தியுள்ளனர். அரசு அவர்களை அழைத்துப் பேச வேண்டும். இதுபற்றி சபையில் பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.இதுபோல் சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), பிரின்ஸ் (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் வெளிநடப்புக்கான காரணம் குறித்து பேட்டி அளித்தனர்.
No comments:
Post a Comment