தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள் தாலுகா வாரியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தது. இவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசின் வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரக வளர்ச்சி, சத்துணவு, கல்வி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்ேவறு துறைகளில் 1.79 லட்சம் காலிப்பணியிடம் உள்ளன. பணி நிரந்தரம், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தினந்தோறும் போராட்டம்: நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர்களை முதல்வர் ஜெயலலிதா அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் அரசு மீது ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 10ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் என தினந்தோறும் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் முக்கிய ஆவணங்கள் நகராமல் தேங்கி கிடக்கின்றன. அரசு அலட்சியம்: பல்வேறு துறைகளில் நடந்து வரும் தொடர் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை, வணிகவரித்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, சத்துணவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை சோ்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாததால் அரசு நிர்வாகமே முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கூடிய தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதன்படி, நேற்று காலை முதல் மாவட்டந்தோறும் தாலுகா வாரியாக சாலை மறியலில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். வாக்குவாதம்: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.30 மணிக்கு ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி டிஎம்எஸ் வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர். அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்ததால் டிஎம்எஸ் வளாகத்தின் நுழைவுவாயிலை மூடி 2 அடுக்குகளாக பேரிகாட் அமைத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புகாக நின்றனர்.
இதையடுத்து, பேரணியாக வந்த அரசு ஊழியர்கள் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட டிஎம்எஸ் நுழைவு வாயில் வரை வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார் தயார் நிலையில் இருந்த பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். 6 லட்சம் பேர் கைது: தமிழகம் முழுவதும் நேற்று 100 தாலுகா அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் என 6 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இதே போல், நீதித்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 12 ஆயிரம் பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்கள் அரசு ஊழியர்களுடன் இணைந்து நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பல இடங்களில் போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே கை கலப்பும், மோதலும் ஏற்பட்டது. இவ்வாறு, மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு வழக்கம்போல, இந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை சாவடிகளை இழுத்து மூடும் போராட்டம்
தொடர்ந்து 15 நாட்களாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். வணிகவரித்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசுக்கு சுமார் ரூ. 6,500 கோடி வரிவசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், அரசு தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் முறையாக வரி செலுத்தியுள்ளதா என்று ஆய்வு செய்யும் 30க்கும் மேற்பட்ட சோதனை சாவடி மற்றும் சோதனை நிலையங்களை இழுத்து மூடும் போராட்டத்தில் இன்று ஈடுபட போவதாக வணிக வரித்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று முதல் காத்திருப்பு போராட்டம்
திருவல்லிக்கேணியில் உள்ள சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு, அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: நாளை (இன்று) முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஓரிரு தினங்களில் நிறைவேற்றுவதாக கூறினார்கள். அவர்கள் கூறி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. எங்களுடைய கோரிக்கைகளை அரசாணையாக வெளியிடும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=196773#sthash.uTLfV5K9.dpuf
No comments:
Post a Comment