கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களில், 20 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.சென்னையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் இயங்கும், டி.பி.ஐ., வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் பலர், உடல் நிலை மோசமாகி மயங்கி விழுந்துள்ளனர். பதிவு மூப்பு ஆசிரியர்களில், ஐந்து பேர்; துப்புரவு பணியாளர்களில், 15 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, முதலுதவிக்கு பின், வெளியேற்றி விட்டதாக, சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். பலர் ரத்த அழுத்தம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என, பல பிரச்னைகளுக்கு ஆளாகி, படுத்த படுக்கையாக உள்ளனர்.
தங்களை பள்ளிக்கல்வி அதிகாரிகள் சந்தித்து பேசாததால், போராட்டம் தொடரும் என, ஆசிரியர் சங்க பொதுச் செயலர் ராபர்ட் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் என்ன
* துப்புரவு பணியாளர்கள், தங்களுடன் நியமிக்கப்பட்ட பள்ளி காவலர்கள் போன்று, தங்களுக்கும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி, மாதம், 14 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
* இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், 2009ல் தங்களுக்கு, ஒரு நாள் முன்னதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போல், தங்களுக்கும், அடிப்படை ஊதியத்தில், முரண்பாடில்லாத சம்பளம் வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment