அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர் சோலைக்குட்டி தனபால் கூறினார்.
வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகமும்,நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனமும் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற விழாவில் அவர், மேலும் பேசியதாவது: மாணவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தொழிற் துறைக்குத் தேவையான தனித்திறமைகளையும் மேம்படுத்த இங்கு ரூ. 60 லட்சம் செலவில் தொழில்நுட்பத்திறன் மேம்பாடு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தொழிற்துறையின் இன்றைய தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து உரிய பயிற்சிகளை நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து அளிப்பதுடன், திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளது. அண்மையில் தொழில்நுட்பத் திறன் பயிற்சியை நிறைவு செய்த மாணவி நிவேதாவுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் பெறும் வேலை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம்.பெரியசாமி பேசுகையில், சர்வதேச அளவிலான நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழில்நுட்பப் பயிற்சி ஆய்வகம் தொடங்கி இருப்பது பெருமைக்குரியது என்றார். விழாவில் ஆய்வகத்தில் முதல்கட்ட பயிற்சி நிறைவு செய்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment