ஜலகண்டாபுரம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை உள்பட அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் குப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக தமிழ்ச்செல்வி என்பவரும், 9 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமையாசிரியை தமிழ்செல்வியின் மகள் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்நிலையில் நேற்று முன் தினமும், நேற்றும் என 2 நாட்கள் பள்ளிக்கு திடீரென விடுமுறை விடப்பட்டது. மகள் திருமணத்தையொட்டி, உள்ளூர் பண்டிகை எனக் காரணம் கூறி, தலைமை ஆசிரியை 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டதாக கூறப்படுகிறது.
முழு ஆண்டுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தலைமை ஆசிரியை தனது தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக, பள்ளிக்கு விடுமுறை அறிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியை தமிழ்செல்வி கூறுகையில், ‘‘குப்பம்பட்டியில் முனியப்பன் கோயில் பண்டிகை நடந்ததால், பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. வேறு காரணம் இல்லை,’’ என்றார். இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ‘‘குப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக எந்த கோயில் பண்டிகையும் நடக்கவில்லை. தலைமை ஆசிரியர் கூறுவது போல், முனியப்பன் கோயிலிலும் பண்டிகை நடக்கவில்லை. தனது மகளின் திருமணத்தில், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக, பள்ளி கல்விக்குழுவினருடன் சேர்ந்து பொய்யான தீர்மானத்தை நிறைவேற்றி, நடக்காத பண்டிகைக்கு விடுமுறை விட்டுள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இந்நிலையில், இந்த புகார் குறித்து நங்கவள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் ெசங்கோட்டுவேலு விசாரணையை துவக்கி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘குப்பம்பட்டி பகுதியில் புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் உள்ளூர் கோயிலில் திருவிழா நடைபெற உள்ளதாக பள்ளி கல்விக்குழு தலைவர் கிருஷ்ணசாமி, அனைவரின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டது. இதனிடையே சுற்று வட்டாரத்தில் எங்குமே பண்டிகை நடக்காததால், தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை என்றே தெரிகிறது. ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பள்ளியின் ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதன் முடிவில் ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment