இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய, 'ஜாட்' சமூகத்தினர், டில்லிக்கு செல்லும் குடிநீர் கால்வாயின் மதகுகளை அடைத்ததால், ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால், டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்கள் சிலவற்றுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தின், அக்பர்புர் - பரோலா பாயின்ட் பகுதியில் உள்ள முனாக் கால்வாயில் இருந்து தான், தலைநகர் டில்லிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இடஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்திய ஜாட் சமூகத்தினர், முனாக் கால்வாயை ஆக்கிரமித்தனர்; அங்குள்ள மதகுகளையும் அடைத்தனர். முனாக் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள, பல்வேறு கருவிகளை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
இதனால், டில்லிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. தண்ணீர் வராததால், டில்லியில் உள்ள, ஏழு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
'டில்லியில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது, 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ராணுவ வளாகங்கள், தீயணைப்பு துறையைத் தவிர மற்றவர்களுக்கு, குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கும். அதனால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி
தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வலியுறுத்தினார். முனாக் கால்வாய் பகுதி பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப, ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
'டில்லி குடிநீர் பிரச்னையில், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், டில்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது; இது, இன்று விசாரணைக்கு
வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், டில்லியில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன், இப்படி ஒரு குடிநீர் தட்டுப்பாட்டை டில்லி மக்கள் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. பிரச்னையை சமாளிக்கும் வகையில், டில்லியில் உள்ள பள்ளிகளுக்கும், குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டில்லியில் நடந்த, தேசிய அவசரநிலை நிர்வாகக் குழு கூட்டத்தில், டில்லிக்கு தண்ணீர் வினியோகம் சீராவதை உறுதி செய்யும்படி, ஹரியானாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டில்லிக்கு தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஹரியானா அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, டில்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஜாட் சமூகத்தினர், போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், மதகுகளை சீர் செய்து, தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் சப்ளை செய்வதற்கு, 24 மணி நேரத்துக்கு மேலாகும். அதனால், இன்னும் இரண்டு நாட்களுக்கு, டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பறந்தது விமான கட்டணம்:நெடுஞ்சாலைகளில், போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், அண்டை மாநிலங்களுக்கான போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஸ் உள்ளிட்ட சாலை வழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சண்டிகாரில் இருந்து டில்லி செல்வதற்கான விமானக் கட்டணம், அதிகபட்சமாக, 4,000 ரூபாயாக இருக்கும். ஆனால், தற்போது, 60 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
போராட்டம் வாபஸ்?
தங்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், கல்வி - வேலைவாய்ப்பில்
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், ஜாட் சமூகத்தினர், ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர்
காயமடைந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, பிவானி மாவட்டத்தில், ஒரு ஏ.டி.எம்., மையத்துக்கும், கூட்டுறவு வங்கிக்கும் தீ வைக்கப்பட்டது. சோனிபட் மாவட்டத்தில், இரண்டு போலீஸ் கண்காணிப்பு அலுவலகங்கள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் காரணமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாட் சமூக பிரதிநிதிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று பேச்சு நடத்தினார். அப்போது, தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், ஜாட் சமூகத்தினர் அனைவரும் போராட்டத்தை கைவிடும்படியும், அந்த சமூக தலைவர் ஜெய்பால் சிங் தெரிவித்தார்.
ராணுவம் குவிப்பு:போராட்டம் வாபஸ் பெறுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாவதற்கு தாமதமானதால், மேலும் பல மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சமூகத்தினரும், போராட்டத்தில் இறங்கினர். இதனால், உ.பி.,யிலும், பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஹரியானாவில் நிலைமையை கட்டுப்படுத்த, மேலும், 1,700 துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே, 3,300 வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கத்தி பாணியில்...சமீபத்தில் வந்த, கத்தி என்ற தமிழ் படத்தில், ஒரு கிராமத்தின் கோரிக்கையை வலியுறுத்த, சென்னைக்கு குடிநீர் வரும் குழாய்களுக்கும் அமர்ந்து, மூத்த குடிமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதனால், சென்னை மக்கள், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவர். அதன்பின், அந்த கிராமத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படுவது போல், அந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.தற்போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, ஜாட் சமூகத்தினர், அதே பாணியில், தங்களுடைய கோரிக்கையை உணர்த்தும் வகையில், டில்லிக்கு தண்ணீர் செல்லும் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment