எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசாணையின்படி அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குநர், துணை இயக்குநர் போன்ற பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் உபரியாக உள்ள அலுவலகப் பணியாளர்களைக் கண்டறிந்து அதை தேவைப்படும் இடங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர், இணை இயக்குநர்களுக்கு உள்ள அமைச்சுப் பணியாளர் நிலையிலான நேர்முக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். பள்ளி வேலை நாள் என்பதைக் காரணம்காட்டி விதிகளுக்குப் புறம்பாக பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களை எவ்வித அலுவலக ஆணையுமின்றி கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைப்பதையும், அதற்கு மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் கைவிட வேண்டும். பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் நேரடி நியமனத்தில் திருத்தம் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஷேக்அலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment