டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில், அதிநவீன வசதிகளுடன், 'எய்ம்ஸ்' மருத்துவமனை செயல்படுகிறது. 'இதன் கிளை, தமிழகத்திலும் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 200 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தருமாறு, தமிழக அரசிடம் கோரியது. இதன்படி, மதுரை -- தோப்பூர்; ஈரோடு -- பெருந்துறை; காஞ்சிபுரம் -- - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு, 2015 ஏப்., மாதம், ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது. அதில், ஈரோடு - பெருந்துறை; மதுரை - தோப்பூர் இடங்கள், 'எய்ம்ஸ்' கிளை அமைக்க ஏற்றது என, அக்குழு தெரிவித்தது.
மத்தியக்குழு ஆய்வு நடத்தி, 10 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை அமையவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுரை - தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை அமைவது உறுதி செய்யப்பட்டாலும், இறுதி அறிவிப்பு வெளியாகிவில்லை. மேலும் சில மாநிலங்களிலும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளைகள் அமைக்க இடம் தேர்வு பட்டுள்ளது. அவற்றையும் சேர்த்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்' என்றார்.
No comments:
Post a Comment