பிடிவாதம் என்கிற மனவலிமையை ஆக்க செயலுக்காகத் திருப்பி விட்டுவிட்டால் போதும் நிலவில் இருந்தும் கனிகள் பறிக்கலாம்! உலகத்தின் தலைவிதியை மாற்றிக் காட்டலாம்!
இதைத் தான் ‘வைராக்கியம்’ என்கிறார்கள். நான் நினைப்பது தான் சரி! நான் சொல்வதுதான் வேதவாக்கு! என்ற பிடிவாதம் கொண்டவர்களை நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறோம். ஏன் இவர்கள் இந்தப் பிடிவாதம் என்று குமுறுகிறோம்! ஆனால் பிடிவாத குணம் என்பது ஒரு வலிமையான மனோபலம் என்கிற உண்மை எத்துணை பேருக்குத் தெரியும்!
தனது பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான் பலமுறை தோற்றாலும், வெற்றியை விரட்டிப் பிடித்தே தீருவேன் என்ற தீவிர முயற்சியினால், அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார் ஆப்ரகாம்லிங்கன். எத்துணை துன்பங்கள் அடுக்காக வந்தாலும், அகிம்சையை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்ற பிடிவாத குணம்தான் மோகந்தாஸை மாகத்மா காந்தி ஆக்கியது.
தோல்வி மேல் தோல்வி துரத்தியும், ஆராய்ச்சிக்கூடமே எரிந்து சாம்பலான போதும், இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்ற பிடிவாத குணம்தான், தாமஸ் ஆல்வா எடிசனின் மின்விளக்காக ஒளிர்ந்தது என்பதோடு 1600 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரன் ஆக்கியது. என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எனது உள்ளங்கால்களால் மிதிப்பேன் என்ற பிடிவாதம்தான், நேபாளத்தில் யாக் எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த டென்சிங்கை, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதன் என்ற பெருமையை உலக வரலாற்றில் பதிவு செய்ய வைத்தது.
இவ்வாறு சாதாரண மனிதர்களுக்கு அவர்களுடைய இலட்சியத்தின் மீது இருந்த பிடிவாத குணம்தான் அவர்களைச் சாதனைச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டச் செய்துள்ளது. ஆகவே பிடிவாத குணம் ஓர் ஆற்றல் மிக்க அற்புத சக்தி என்பது புரிகிறதல்லவா?
என்றாலும், சுய இலாபத்திற்காகவும், வீண் கவுரவத்திற்காகவும், ஆணவப் போக்கில் தனது தவறை உணர்ந்தும், அதைத் திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் தான் அழிந்து போகிறார்கள். ஆனால் நல்ல இலட்சியத்தில் பிடிவாதத்துடன் இருப்பவர்கள் வெல்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் நல்லனவற்றில் பிடிவாதத்தை விடாப்பிடியாகப் உயர உயரச் செல்வதற்கு எல்லையில்லா முயற்சியும், ஈடு இணையில்லாத உழைப்பும், தளராத தன்னம்பிக்கையும் அவசியம் என்றாலும், அதைவிட முக்கியமானது அப்பழுக்கற்ற ஒழுக்கம்.
ஏனென்றால் திறமையை வைத்துக் கொண்டு ஒருவனால், சிகரத்தை அடைய முடிந்தாலும், சுய ஒழுக்கம் இல்லாது போனால் ஒரு நொடிகூட அங்கு நிலைத்து நிற்கமுடியாது. ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் ஒழுக்க நெறிகளில் இருந்து வழுவமாட்டேன் என்ற பிடிவாத குணத்தை மட்டும் ஒருபோதும் தளர்த்திக் கொள்ளாமல் உழைத்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றிச் சிகரங்கள் உங்களுடைய சிம்மாசனமாகும். நேர்மையான நெஞ்சமிருந்தால் நெருப்பின் மீதும் படுத்துறங்கலாம். மனங்களை வாசிக்கும் திறனிருந்தால் மகிழ்ச்சிச் சிகரத்தில் கொடிப் பிடிக்கலாம்!
-முனைவர் கவிதாசன்.
No comments:
Post a Comment