நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதலாக 10 ஆயிரம் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் நேற்று நடந்த விழாவில் பேசினார். கோவை, சிங்காநல்லுார், வரதராஜபுரத்தில், 580 கோடி ரூபாயில், புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அறைகளை பார்வையிட்டு, மேடைக்கு சென்ற மோடியை கவர்னர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை திறந்து வைத்த மோடி, தமிழக ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மோகன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம், சம்பிரதாய முறைப்படி ஒப்படைத்தார். கோவை மாநகருக்கு வந்ததில் மகிழ்ச்சி என, தமிழில், தனது உரையை துவக்கிய மோடி, அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்த இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 20 இடங்கள், இ.எஸ்.ஐ., கழகத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும். இம்மருத்துவமனையில், தொழிலாளர்களுக்கு, உயர் சிகிச்சை வழங்கப்படும்.
நாடு முழுவதும், 45 கோடி தொழிலாளர்களுக்கு, பிரதம மந்திரியின் மூன்று இன்சூரன்ஸ் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ., கழகம், ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வைப்பு நிதி மூலம், ஆறு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., (பிரத்யேக அடையாள எண்) அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியில், புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இ.எஸ்.ஐ., மூலம் நாடு முழுவதும், 34 நகரங்களில், 839 மையங்களில் இரண்டு கோடி தொழிலாளர்களுக்கும், எட்டுக் கோடி பயனாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், 85 ஆயிரம் தொழிலாளர்கள், 28 லட்சம் பயனாளிகள், கோவையில், 27 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.
தமிழகத்தில் உள்ள, 10 இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், எட்டு மருத்துவமனைகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. நெல்லை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, 50ல் இருந்து, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இ.எஸ்.ஐ.சி., 2.0 எனும், இரண்டாவது தலைமுறை திட்டத்தை வகுத்திருக்கிறோம்.
இ.எஸ்.ஐ., பலன்கள் பெற, ஊதிய உச்சவரம்பை, 6,500 - 15 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்; 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்கவும், உடனடியாக, 23 கல்லுாரிகளில், 1,700 இடங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நெல்லை, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதலாக, 345 மருத்துவ இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை போல், பல மாநிலங்களில், மருத்துவமனைகள் கட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; தமிழகத்தில், விரைவில் வரும். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. நாம் அனைவரும் கடுமையாக உழைத்தால், இந்தியாவை வளப்படுத்த முடியும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
கோவை எம்.பி., நாகராஜ், இ.எஸ்.ஐ., இயக்குனர் ஜெனரல் தீபக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழகம் நன்மை அடையும்பிரகாஷ் ஜவடேகர் பேச்சு:பா.ஜ., பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், பிரதமர் மோடி அரசு, ஏராளமான திட்டங்களை, தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளது; திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும், பயன் பெறுகின்றனர். தமிழகத்தில், பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்தால், மேலும் மேன்மையடையும், என்றார்.
No comments:
Post a Comment