வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக அரசை கண்டித்து ஜாக்டோ அமைப்பின் தொடர் மறியல் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இன்று அனைத்து பள்ளிகளையும் பூட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர் சங்கங்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த மாதம் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அறிவித்தது.
முதல்நாளான நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் இந்த தொடர் மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நேற்றும் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டனர். முன்னதாக 15 கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டனர். நேற்றைய போராட்டத்துக்கு தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் பூபாலன் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 15 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நான்கு கட்ட போராட்டத்தை நடத்திவிட்டனர். இதுவரை அரசோ, அமைச்சர்களோ ஆசிரியர்களை அழைத்து பேசவில்லை. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும், அழைத்து பேசுவோம் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
அதைத்தான் நாங்கள் நிறைவேற்ற கேட்கிறோம். ஆனால் இந்த அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை ஏமாற்றி வருகிறது. கடந்த கால போராட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நினைத்துப் பார்க்க வேண்டும். இனிமேலும் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்று கேட்டோம். 7வது ஊதியக் குழுவும் வந்துவிட்டது. எங்களை ஏமாற்றும் வேலையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பூபாலன் கூறினார். இதையடுத்து போலீசார் ஆசிரியர்களை கைது செய்தனர். இரண்டாவது நாளான நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் தீவிரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இந்த போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் பிஆர்டி, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் இன்று பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும், எந்தப் பள்ளியில் ஆசிரியர் இல்லையோ அந்த பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறியல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளின் சாவிகளை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ெதாடக்க கல்வித்துறையை பொறுத்தவரையில் இன்று 75 சதவீத பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓராசிரியர், ஈராசிரியர் உள்ள 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை அரசு அழைத்து பேசாத நிலையில் பள்ளிகளை தாங்களே பூட்டப் போவதாக ஆசிரியர்கள் நேற்று தெரிவித்தனர். 3 நாள் தொடர் மறியல் போராட்டத்துக்கு பிறகும் அரசு அமைதிகாட்டினால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment