அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் கணினி பட்டதாரி ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் முத்துசாமி போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். மாநிலச் செயலர் குமரேசன், துணைத் தலைவர்கள் கார்த்தி, புகழேந்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment