ஆசிரியர்களைப் போற்றியவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா. புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 19-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பட்டமளித்து மேலும் பேசியது:
இன்றும் நமது மனதில் வாழும் குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் உயர்ந்து நிற்க அவரது ஆசிரியர்களான சிவசுப்பிரமணியனும், சின்னசாமியும்தான் காரணம். அரிஸ்டாட்டில் காலத்தில் அலெக்சாண்டர் பிறந்ததற்காகவே அவரது தந்தை பிலிப்மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டார் என்பதே வரலாறு. தனது ஆசிரியரின் கருத்துகளைத் தேசம் முழுவதும் நிலைநிறுத்தச் செய்த சுவாமி விவேகானந்தர் உலகம் போற்றும் வீரத்துறவியாக திகழ்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் தனது ஆசிரியரின் மீது கொண்ட மரியாதையால் பீமாராவ் என்கிற தனது பெயரை அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டதை நாடறியும். இதுபோல் நீங்களும் நல்ல ஆசிரியர்கள் மூலம் பட்டம் பெற்றுள்ளீர்கள். அதற்கு முதல் காரணம் உங்கள் பெற்றோர்களே. இந்நிலைக்கு உங்களை உயர்த்த பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்திருக்கின்றனர். எனவே உங்களது பெற்றோரையும் ஆசிரியர்களையும் போற்ற வேண்டியது முதல் கடமை.
ஒரு தேசம் உயர அந்த நாட்டின் மொழி போற்றப்படுதல் வேண்டும். நமது தாய்மொழியான தமிழைப் போற்றிட வேண்டும். இதை நான் கூறவில்லை. அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் கூறியுள்ளார். அவர் தமிழ்மொழி மட்டுமல்ல திராவிட மொழிகளையும் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற உலக மொழிகளையும் அறிந்தவர். இந்தியாவிற்குப் பணியாற்ற வந்து 720 கிமீ கால்நடையாகவே சென்று தமிழ்நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மக்களோடு மக்களாகப் பழகி அறிந்துகொண்டவர் கூறினார் என்றால் அதன் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். ரஷ்ய நாட்டில் டங்ஸ்டன் இழைகளால் பாதுகாக்கப்பட்ட அறையில் உலக உன்னத பொருட்களெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன.
அதில் உலகப் பொதுமறையும் ஒன்று. பட்டம் பெறுகின்ற நீங்கள் சமூகத்தின் முழு அங்கீகாரம் பெற்ற மனிதர்களாக இன்றுமுதல் வாழ்ந்திட வேண்டும். நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் கால மாற்றங்களோடு காப்பாற்றுவது உங்களது தலையாயக் கடமை. பண்பாடு என்பது உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் தாழ்ந்த நிலையில் வாழ்ந்தாலும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களைக் கொண்டு திகழ வேண்டும் என்றார்.
இதில் இளநிலை 535 பேர், முதுநிலை 375 பேர், ஆய்வியல் நிறைஞர் 80 பேர், பல்கலைக்கழகத்தர வரிசையில் 18 மாணவர்கள் உள்பட மொத்தம் 998 பேர் பட்டம் பெற்றனர்.
கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித் தலைவர் எஸ். வள்ளியப்பன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரிச் செயலர் நா. சுப்ரமணியன் விழாவைத் தொடக்கி வைத்தார்
No comments:
Post a Comment