நடப்பாண்டில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் அதிக சதவீதத்தில் மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்த தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளி கல்வி துறை கல்வியாண்டு துவக்கம் முதல் மாணவ, மாணவியருக்கு மட்டுமின்றி பாட வாரியான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு வகுப்பு, பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அரையாண்டு தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை இயக்குனர் பால முருகன் தலைமை வகித்து பரிசு, சான்றுகளை வழங்கினார்.
ஈரோடு சி.இ.ஓ. அய்யண்ணன் பங்கேற்றார். பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடிக்க மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment