கோவை,மார்ச்.19-
கோவை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பட்டியல் தயாரிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவுபடி பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான பட்டியல் தயாரிப்பு பணி கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்கு கல்வித்தகுதி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2011 தேதி அன்று 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். பாடப்பிரிவுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், தெலுங்கு பண்டிட் ஆகியவை.

தமிழை பாடமாக கொண்டவர்களில் அனைத்து முன்னுரிமை பதிவு தாரர்களும், முன்னுரிமையற்ற பதிவுதாரர்களும், மற்ற பாடங்களில் முன்னுரிமை பெற்ற ஆதரவற்ற விதவைகள், கலப்புமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுதிறனாளிகள் என பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோரும், ஆங்கிலத்தை பாடமாக கொண்டவர்களில் பி.சி.ஓ. 31.5.2000 வரையிலும், புவியியலை பாடமாக கொண்டவர்களில் பி.சி.ஓ. 24.12.1992 வரையிலும், எம்.பி.சி. வகுப்பினர் 27.7.2001 வரையிலும், எஸ்.சி. வகுப்பினர் 2.8.2006 வரையிலும் பதிவு மூப்பு பெற்றவர்கள் இந்த பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

இவ்வாறான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உடையவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, புதுப்பித்தல் சான்றுகள், கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றுடன் இன்று(திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி ஆகிய 3 நாட்களில், வேலைவாய்ப்பு உதவி இயக்குனரை சந்தித்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இன்று முதல் 21-ந் தேதி வரை வருபவர்களுக்கு மட்டுமே சரிபார்த்தல் பணி மேற்கொள்ளப்படும். அதற்கு பின்னர் வருபவர்களிடம் இருந்து பெறும் விண்ணப்பங்கள் பரிந்துரைக்க ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment