அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டு, அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு :
20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப். 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான சில அறிவிப்புகள் சட்டப்பேரவையில் பிப். 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிர்வாக ரீதியான வழக்குகளுக்குத் தனி நிர்வாகத் தீர்வாயம் அமைக்கவும் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்ற படிகள் அனைத்தையும் ஊதிய முரண்பாடுகளின்றி வழங்க ஊதியக் குழுவை அமைக்கவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கென அரசு ஒரு காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கித் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment