ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் என்று பேசுபவர்கள், எழுதுபவர்கள் உத்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் ”அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளதை தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது புதிராக உள்ளது. இத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு சட்டம் இயற்றினால் அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்பட உறுதியாக வாய்ப்பு ஏற்படும்.
திருமயம் ஒன்றியம், விராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு அரசுப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல் அரசுப் பள்ளி போன்ற பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதைப் பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். பல அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ள போதும், இப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒரு பள்ளித் தாளாளரும் ஒரு சில பெற்றோர்களும், ஒரு சில ஆசிரியர்களும் மட்டுமே காரணமாக இருப்பதை அறிய முடிகிறது.
எனவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் ஒரு சில எண்ணிக்கையுடைய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படித்தால் கூட அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்படும் நிலை உருவாகும். ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் குழந்தை அரசுப்பள்ளியில் படித்தால் கூட, அதுவே அந்தப் பள்ளி சிறப்பாக இயங்க கண்டிப்பாக வழிவகுக்கும். அவரைப் பார்த்து மேலும் சிலரும் தங்கள் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்கள்.
இன்று அரசுப்பள்ளிகளில் அடிமட்ட ஏழைகளின் பிள்ளைகள் தான் படிக்கிறார்கள்? இப்படிப்பட்ட பெற்றோர்கள் அரசுப்பள்ளிகளின் செயல்பாட்டைப் பற்றியும் குறைபாடுகளைப் பற்றியும் யாரிடமும் கேள்வி எழுப்ப முடிவதில்லை. எவரிடமும் கேள்வி கேட்கும் வாய்ப்பற்றவர்கள் அரசுப்பள்ளிகளின் பெற்றோர்களாக இருப்பதால் தான் அரசுப்பள்ளிகள் ஒராசிரியர் பள்ளிகளாகவும் மாணவர் இல்லாத பள்ளிகளாகவும் மாறியுள்ளன.
சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமையின் வழிகாட்டுதலில் தான் பல்வேறு துறைகளின் அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் செயல்படுகின்றன. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம் என்று அரசு சட்டம் இயற்றாமலேயே அவர்களாகவே முன்வரலாம். தனியார்மயத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இதைச் செய்வதும் அவர்களின் கொள்கை உறுதிப்பாட்டை பின்பற்றுவதாக அமையும்.
வேறும் வார்த்தைகளால் அரசுப் பள்ளிகளில் எந்த மாற்றமும் நடந்துவிடாது. அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுபவர்கள் அவரவர்க்கு இயன்றதை செயல் வடிவமாக்கவேண்டும்.
சுமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. பேசி: 9965128135, 9487995084.
------------கட்டுரையை கீழே இணைத்துள்ளேன் --------------
தருமபுரி மாவட்டம், பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அரசு ஆரம்பப்பள்ளி கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பில் மட்டும் நான்கு மாணவர்கள் படித்தனர். அந்த நான்கு மாணவர்களும் தேர்ச்சி பெற்று இவ்வாண்டு ஆறாம் வகுப்பில் சேர அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று விட்டனர்.
தற்போது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் வேலை நாட்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார். இதனால் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
இது ஒரே ஆண்டில் உருவான பிரச்னை அல்ல. பல ஆண்டுகளின் தொடர்ச்சிதான் இந்த நிலை உருவாகக் காரணம். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறபோது மாணவர்களைத் தக்க வைக்கவோ, புதிதாக மாணவர்களை சேர்க்கவோ பள்ளி ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை? மாநில அரசின் கல்வித் துறை என்ன செய்கிறது?
அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதும், தனியார் பள்ளிகளில் அதிகரிப்பதும் கடந்த பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவலம். 2001-ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-இல் 36,17,473-ஆக அதிகரித்தது. ஆனால், மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது.
2008-09-இல் இருந்து 2012-13 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட அ.தி.மு.க. அரசு மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதற்கு இலவசமாக புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், வண்ணப்பென்சில்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்ற இலவசங்களை வழங்க திட்டமிட்டது. இதற்குப் பிறகும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.
உதாரணமாக, 2013-14, 2014-15 ஆண்டுகளில் அரசின் மானியக்கோரிக்கை அறிக்கையின் படியே அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது.
2007-08இல் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் 2,44,864-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2014-15இல் 1,54,080-ஆக குறைந்து விட்டது.
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் 54 மாநகராட்சிப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இக்காலத்தில் மாநகராட்சிப்பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000-ஆக குறைந்து விட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டு 98,526-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2015-இல் 84,243-ஆக குறைந்து விட்டது.
அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் பள்ளிக் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்த காரணத்தினால், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு பல பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் (பாப்பம்பட்டி பள்ளியைப் போல்) மூடப்பட்டு விட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிப்பு யாருக்கு? சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஒன்றியம், விராச்சிலை என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
இப்பள்ளி 1899-ஆம் ஆண்டு உருவானது. 120 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில் ஒரு கட்டத்தில் 800 மாணவர்கள் படித்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இந்த நடுநிலைப்பள்ளியில் தற்போது 224 மாணவர்கள் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்களும், தாளாளரும் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி கடுமையான முயற்சி மேற்கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களின் பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
224 மாணவர்களில் தலித் பிரிவினர் 100 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 102 பேர், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 22 பேர். 178 மாணவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள், மூன்று மாணவர்களின் பெற்றோர் துப்புரவுத் தொழிலாளர்கள். 18 மாணவர்களின் பெற்றோர் ஏழை விவசாயிகள். பூசாரி, மண் பாண்டம் செய்பவர், ஆசாரி, டீக்கடை, பெயின்டிங் வேலை போன்ற இதர பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 25 பேர்.
விராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளர் லாப நோக்கோடு பள்ளியை நடத்தவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வதாக கூறினார். ஆசிரியர் நியமனத்திற்கு அந்தத் தாளாளர் பணம் வாங்குவதில்லை என அங்குள்ள ஆசிரியர்கள் நெகிழ்வோடு கூறினார்கள்.
இப்பள்ளிக்கு 9, 10-ஆம் வகுப்புகள் தொடங்க அனுமதியளித்து இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்துவதோடு, ஆங்கில வழி வகுப்புகள் துவங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 2013-14இல் 21 மாணவர்கள் மட்டுமே படித்தனர். தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்ற மாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்க்க ஆசிரியர்கள், ஊர் மக்களிடம் ரூ.5.50 லட்சம் வசூல் செய்து இரண்டு வகுப்பறைகளைக் கட்டியதோடு அதில் குளிர்சாதனம், மின்விசிறிகளை பொருத்தினார்கள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளையும் ஏற்படுத்தியதோடு கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினார்கள்.
அரசுப் பள்ளிக்கு அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி குறைவாக இருந்ததால் அரசுப்பள்ளிக்கு அருகில் ஒரு புதிய கட்டடத்தையும் கட்டினார்கள். அங்கும் குடிநீர், கழிப்பறை, சிமெண்ட் நடைபாதை ஆகியவற்றை அமைத்ததோடு இரண்டு ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள். அங்கன்வாடி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்கள்.
இதனால் தற்போது அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 37 குழந்தைகளும், பள்ளியில் 79 மாணவர்களும் பயில்கின்றனர். அரசுப் பள்ளியைப் பாதுகாக்க, ஆசிரியர்களும், ஊர் மக்களும் இணைந்து களமிறங்கியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிந்துள்ளது. ஊர்மக்கள் உதவியோடு மாநிலத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைத்ததோடு சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய பல நல்ல அனுபவங்களும் உண்டு.
அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்?
சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும், சில அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணமென்ன?
தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். இலவசங்கள் கொடுத்தால் மட்டும் போதாது. குடிநீர், கழிப்பிடம், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளையும் அளித்திட வேண்டும்.
பல பள்ளிகளில் உதவியாளர்கள் இல்லை, காவலர்கள் இல்லை, துப்புரவு செய்திட ஆளில்லை. சில பள்ளிகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் குடிகாரர்களும் பயன்படுத்துகின்றனர். ஓவியம், இசை, நடனம், விளையாட்டு என மாணவர்களின் திறன் வளர்க்கும் ஏற்பாடு இல்லை. பணியாற்றும் ஆசிரியர்களின் பணிக் கலாசாரத்திற்கும் பள்ளி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்குண்டு. இவற்றையெல்லாம் அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்குவதால் குழந்தைகள் தொடர்ச்சியாக அதே பள்ளிகளில் முதல்வகுப்பில் சேரும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, அரசுப்பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைக்க வேண்டும். அங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. முடித்து தொடர்ச்சியாக அரசு பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தைகள் சேரும் வாய்ப்பை உருவாக்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.
பல பாதகமான பரிந்துரைகளை செய்துள்ள டி.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான குழு அங்கன்வாடி மையங்களை அரசுப் பள்ளிகளோடு இணைக்க வேண்டுமென்ற சாதகமான அம்சத்தையும் கூறியுள்ளது.
கல்வித் தரத்தை உயர்த்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டிய முக்கியமானப் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கட்டுரையாளர்:
மாநிலச் செயலாளர்,
சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்).
ஜி. ராமகிருஷ்ணன்
No comments:
Post a Comment