தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் உருவான, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2வில், தனியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. தனியார் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் கணினி வழிக் கல்வியும், ஸ்மார்ட் வகுப்பும் கட்டாயமாக கற்றுத் தரப்படுகின்றன. அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பை கொண்டு வர, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், ஐ.சி.டி., திட்டம் அமலில் உள்ளது.
இதில், ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. திட்டப்படி, மாணவர்களுக்கு கற்றுத் தருவதில், அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளில், கணினி வழிக்கல்விக்கான பாடத்திட்டம், 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் அறிமுகமானது. அதற்காக, தமிழ்நாடு பாடநுால் கழகம், 6 முதல், 9ம் வகுப்பு வரை, புத்தகத்தை
அச்சிட்டும், இந்த பாடம் இன்று வரை அமலுக்கு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழக கல்வித்திட்ட செயல்பாடுகள் குறித்த, மத்திய அரசின் அறிக்கையிலும், 'தமிழகத்தில் கணினி வழி செயல்பாடுகள் சரியில்லை' என, 'குட்டு' வைத்தது. இதற்கிடையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான, 'டெட்' தேர்விலும், கணினி படிப்பை அறிமுகம் செய்யவில்லை. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3,000 கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த காரணங்களால், தமிழகத்தில், பி.எஸ்சி., முடித்து, பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
பத்து ஆண்டுகளில், 50 ஆயிரம் பட்டதாரி கணினி ஆசிரியர்கள் படிப்பை முடித்து விட்டு, கூலி வேலைக்கு செல்லும் அவலம் உள்ளது. உலகமே கணினி யுகத்திற்கு மாறிவிட்ட நிலையில், தமிழக பள்ளிக் கல்வி மட்டும், கணினி பாடத்தையே புறக்கணித்துள்ளது கல்வியாளர்களை அதிர வைத்து உள்ளது.
தமிழக அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும், கணினி அறிவியல் படிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. அத்துடன், பகுதி நேர கணினி ஆசிரியர்களாக, பி.எஸ்சி., முடித்தவர்களை நியமிக்கவில்லை. அதேபோல், 'அனிமேஷன்' ஆசிரியர்கள் நியமிக்கும் அரசு அறிவிப்பும், கிடப்புக்கு போய்விட்டது. கணினி அறிவியல் பாடத்தையே, தமிழக அரசு ஐந்து ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது. ஏ.முத்து வடிவேல், மாநில துணை அமைப்பாளர், தமிழக பி.எட்., வேலையில்லாத கணினி ஆசிரியர் சங்கம்.
No comments:
Post a Comment