பிகார் மாநில பிளஸ் 2 தேர்வில் போலியாக முதலிடம் பிடித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட மாணவி ரூபி ராய், சிறுமி என்பதால், அவரை சிறுவர்கள் காப்பகத்துக்கு மாற்ற பாட்னா மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிகார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகளை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. அப்போது, மனிதநேயப் பாடப்பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ரூபி ராயிடம், அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) என்றால் என்ன? என்ற கேள்விக்கு அவர் சமையல் சம்பந்தப்பட்ட பாடம் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், முதலிடம் பிடித்த மாணவர்கள் முரணாக பதில் கூறியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, விசாரணை நடத்தவும் வழிவகுத்தது.
இதைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் (எஸ்ஐடி) ரூபி ராய் கைது செய்யப்பட்டு பாட்னாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது கல்விச் சான்றிதழின்படி, அவருக்கு 17 வயதே ஆவதால் அவரை சிறையில் அடைக்க முடியாது என்று மாணவி சார்பில் சிறார் நீதி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் கே.டி. மிஸ்ரா, பாட்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கு, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகவேந்திர குமார் சிங் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.டி. மிஸ்ரா, குற்றம்சாட்டப்பட்ட ரூபி ராயின் வயதுச் சான்றிதழை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ராகவேந்திர குமார் சிங், குற்றம்சாட்டப்பட்ட ரூபிராய், சிறுமி என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகக் கூறி, அவரை சிறையில் இருந்து சிறுவர்கள் காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இதற்கு, பிகார் பள்ளிக் கல்வித் தேர்வு வாரியமும் (பி.எஸ்.இ.பி.) எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment