கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அவதி நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சர்வ சிக் ஷா அபியான், ஆர்.எம்.எஸ்.ஏ ., நபார்டு மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் கழிப்பறைகள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
அவை கட்டி முடித்து ஒரு சில வாரங்கள் பயன்பாட்டில் இருக்கும். அதன்பின் முறையாக பராமரிப்பு செய்வது இல்லை. இதற்கு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை மற்றும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க நிதி இல்லை என காரணம் கூறுவர். இதனால் பல கழிப்பறைகள் பயன்பாடு இன்றி உள்ளே நுழைய முடியாத வகையில் முடங்கும். பல இடங்களில் இதைக்காணலாம். இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 'துாய்மைபாரதம்' திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிக்காக ஊரக வளர்ச்சி துறை மூலம் பள்ளிகளுக்கு மாதந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பள்ளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு:ஆரம்ப பள்ளி கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியாளருக்கு மாதம் ரூ.750 சம்பளம், சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க ரூ.300, நடுநிலை பள்ளிக்கு ரூ.1000 சம்பளம், சுத்தம் செய்யும் பொருட்கள் வாங்க ரூ.500, உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.1,500 சம்பளம், சுத்தம் செய்யும் பொருட்கள் வாங்கிட ரூ.750, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.2,000 சம்பளம், சுத்தம் செய்யும் பொருட்கள் வாங்க ரூ.1,000 என நிர்ணயம் செய்துள்ளனர்.
பணியாளர்கள் நியமனம்
கிராமப்புற பள்ளி கழிப்பறைகள் சுத்தம் செய்ய அந்தந்த ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர் கண்காணிப்பில், அந்தந்த ஊரில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சுகாதார காவலர் அல்லது ஊராட்சி துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன், பள்ளி முடிந்த பின் தினமும் இருவேளை அவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
இப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்காணித்து அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பள்ளி கழிப்பறைகள் 'பளிச்' என மாற வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment