தமிழகத்தில், வரும் 16ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற அணுகுமுறை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 83 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலாமாண்டு சேர்க்கை நடந்து வருகிறது.
இந்நிலையில், வரும் 16ம் தேதி, அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில், புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வி குறித்த அணுகுமுறை பயிற்சி அளிக்க, தமிழக உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற குறுகிய கால அணுகுமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகளில் மாணவ, மாணவியரிடம், உயர்கல்வி குறித்த பயம் போக்குதல்; சீனியர் மாணவர்களிடம் பழகும் முறை; 'ராகிங்' போன்ற பிரச்னைகள் இல்லாமல், கல்லுாரியில் நண்பர்களாக பழகுதல்; ஆங்கில அறிவை வளர்த்தல் போன்ற பயிற்சிகள் தரப்பட உள்ளன.
இதற்காக, அனைத்து கல்லுாரிகளின் ஆசிரியர்களுக்கும், தமிழக உயர்கல்வி மன்றத்தின் மூலம் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் மூலம், புதிய மாணவர்களுக்கு, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர்கல்வித் துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment