மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை, தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனு:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதே போல், மாநில அரசு கல்வி நிறுவனங்களில், மத்திய அரசுக்கான, 15 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்காகவும், தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பதில் இல்லை:இந்த தேர்வுகளை, தமிழில் நடத்தக் கோரி, 2012 பிப்., 24ல் மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்வுகளை, தமிழிலும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இந்த மனு குறித்து பதிலளிக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய - மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது; இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழி ஆங்கிலம் தான்.
மூன்று மாதத்தில்...இருப்பினும், 'இக்கல்வி நிறுவனங்களுக்கு இந்தியில் நுழைவுத்தேர்வு நடத்தும் போது, ஏன் மாநில மொழிகளில் நடத்தக் கூடாது' என, மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, மனுதாரர் அளித்த மனுவை, மத்திய அரசு ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்.
இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment