தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், மொத்தம் உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், 36 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
நாடு முழுவதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில், தன்னாட்சி பெற்ற அமைப்பாக, 23 ஐ.ஐ.டி.,க்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படுகிறது.
ஜே.இ.இ., முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு ஐ.ஐ.டி.,யால் நேரடியாக நடத்தப்பட்டது.மே 22ல், நடந்த அட்வான்ஸ்டு தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியாயின. மொத்தம், 58 ஆயிரத்து, 964 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாணவர் அமன் பன்சால் முதலிடம் பெற்றுள்ளார்.
தேசிய அளவில், 133வது இடம் பிடித்த, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த ரியா சிங், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் முதல் முறையாக, வெளிநாட்டினரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் தேர்வு எழுதியதில், இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 23 ஐ.ஐ.டி.,க்களில், 10 ஆயிரத்து, 575 பி.இ., - பி.டெக்., இடங்களில் தரவரிசைப் படி, ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும்.
தமிழகத்தில் 650 பேர்:ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், தேசிய அளவில், மொத்தம், ஏழு மண்டலங்கள் மூலம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய, 650 பேர் மற்றும் புதுச்சேரியில், 38 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்
No comments:
Post a Comment