தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு மொத்தம் 26,313 பேர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் நேரடி விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி கடைசியாகும். இந்நிலையில் நேரடி விநியோகத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்ற 21,942 பேரும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 4,027 பேரும், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்காக 344 பேரும் என மொத்தம் 26,313 விண்ணப்பங்களை தேர்வுக்குழு அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளன.
இது தொடர்பாக தேர்வுக்குழு செயலர் டாக்டர் செல்வராஜன் கூறியது: தேர்வுக் குழுவுக்கு வந்துள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும் ஆகிய மூன்று அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இவை மூன்றும் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஜூன் 13-இல் ரேண்டம் எண்: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 13-ஆம் தேதி கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்க உள்ளது.
No comments:
Post a Comment