மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும் என, மகளிர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது. அரசு மருத்துவர்கள், பட்ட மேல்படிப்பு மருத்துவர்கள் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், உலக மகளிர் தின விழா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், மருத்துவமனையின் மகப்பேறு தலைமை மருத்துவர் நீலாம்பாள் தலைமை வகித்துப் பேசியது:
உலக மகளிர் தின விழா பெண்களின் நலம் காக்க உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டில், பணிபுரியும் இடத்தில், சமூகத்தில் பெண்களை மரியதையுடன், ஆண்களுக்கு சமமாக நடத்த வேண்டும். மேலும், கருவில் பெண் சிசுக்களைக் கருசிதைவு செய்வது, பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும் என்றார்.
செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர் ஞானம்பாள் பேசியது:
குடும்பத்தில் உள்ள அனைவரையும் பேணி காக்கும் பெண்கள் தங்களின் உடல் நலத்தைக் காக்க மறந்து விடுகிறார்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால், பல பெண்கள் ரத்தச் சோகையுடன் காணப்படுகின்றனர். பெண்கள் ஆரோக்கியமான உணவை உண்டால்தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்றார்.
அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.ரங்கநாதன் பேசியது:
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதற்குக் காரணம் பெண் மகப்பேறு மருத்துவர்கள், பெண் செவிலியர்கள், பெண் மருத்துவமனை ஊழியர்கள் பங்கு மிக முக்கியமானது.
இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் பெண் மருத்துவர்கள் பல நேரங்களில் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும் என்றார்.
விழாவில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பெண் ஊழியர்கள், பெண் நோயாளிகள் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
No comments:
Post a Comment