''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார். இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன.
*தேர்தல் பிரசாரம் செய்வோர், வெவ்வேறு ஜாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, தற்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், பரஸ்பரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
*ஓட்டுகளை பெற, ஜாதி அல்லது சமுதாய உணர்வுகளின் அடிப்படையில், வேண்டுகோள் விடுக்கக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது பிற வழிபாட்டு இடங்களை, தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தக்கூடாது
*அரசியல் கட்சி அல்லது வேட்பாளர், தான் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் குறித்து, உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு, முன்னரே தெரிவிக்க வேண்டும்
*கூட்டம் தொடர்பாக, ஒலிபெருக்கியோ அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெற, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன்னதாகவே விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ள வேண்டும்
*ஊர்வலம் துவங்கும் நேரம், ஆரம்பிக்கும் இடம், அது செல்லும் வழித்தடம், முடிவடையும் இடம், போன்ற விவரங்களை, முன்கூட்டியே போலீஸ் துறைக்கு தெரிவித்து, உரிய முன் அனுமதியுடன் நடத்த வேண்டும்
*கூட்டம், ஊர்வலம் மற்றும் பிற அனுமதிகளைப் பெற, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சுவர் விளம்பரங்கள்:
*நகரப் பகுதிகளில், பொது இடங்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிடக்கூடிய இடங்களில், உரிமையாளரின் ஒப்புதல் பெற்றிருந்தாலும் கூட, சுவரில் எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது
*ஊரகப் பகுதிகளில், கட்டட உரிமையாளர் ஒப்புதலுடன், விளம்பரம் செய்யலாம். அவ்வாறு பெறப்பட்ட அனுமதியின் நகல்களை, மூன்று தினங்களுக்குள், தேர்தல் அதிகாரியிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடமோ, வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி, உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும்.
அரசு திட்டங்கள்:
*புதிய திட்டங்கள், சலுகைகள், நிதிச் சலுகைகள் எவ்வடிவிலும் வெளியிடுவது அல்லது, அது தொடர்பான உறுதிமொழிகள் மற்றும் அடிக்கல் நாட்டுதல் முதலான நிகழ்வுகள் தடை செய்யப்படுகின்றன*இது, சட்டசபை மற்றும் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களின், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளும் பணிகளுக்கும் பொருந்தும்
*அரசு சாதனைகளை விளக்க, அரசு நிதியை பயன்படுத்தி, விளம்பரங்கள் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது
*அரசுக்கு சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்குமிடங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான ஏனைய தங்குமிடங்களை, அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், எந்தவித பாகுபாடுமின்றி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
*அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ, தேர்தல் பிரசாரம் செய்யும் நோக்கத்திற்காக, இதுபோன்ற தங்குமிடங்களை, பிரசார அலுவலகமாகவோ அல்லது பொதுக்கூட்டம் நடத்தும் இடமாகவோ பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று புகார்கள்:
பொதுமக்கள், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, மூன்று புகார்கள் வந்தன. துாத்துக்குடியில் பொருட்கள் வழங்க, டோக்கன் கொடுக்கப்படுவதாக புகார் வந்தது; விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள், பேனர்கள் அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, 6ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் படம் அகற்றம்:
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படம் அகற்றப்பட்டது.அதேபோல், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில், ஆகியவற்றில் உள்ள முதல்வர் படத்தை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி, மாநிலம் முழுவதும்துவக்கப்பட்டது.சென்னை மாநகராட்சியின் அனைத்து மலிவு விலை உணவகங்களிலும், எல்.சி.டி., திரையில் அரசு சாதனைகள் விளம்பரமாக ஒளிபரப்பப்பட்டன; அந்த விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மாநகராட்சி இணையதளத்தில் இருந்த அரசு சாதனை விளம்பரங்கள், பணிகள் குறித்த விவரங்கள், யாரும் பார்க்க முடியாத வகையில் முடக்கப்பட்டன. மாநகராட்சி துறைஅலுவலகங்களில் இருந்த முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. மகாத்மா காந்தி படத்தை தவிர, வேறு எந்த தலைவர்களின் படமும், அரசு அலுவலகத்தில் இடம்பெறக் கூடாது என, தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. கவுன்சிலர்கள், மண்டலக் குழு, நிலைக்குழு, துணை மேயர், மேயர் அறைகளை பூட்ட, அந்தந்த வார்டு, மண்டல, மாநகராட்சி மன்ற துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பணம் எடுத்து செல்லலாமா?
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று பறக்கும் படை, மூன்று சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். பறக்கும் படையில், இரண்டு போலீசார், இரண்டு வருவாய் துறை அலுவலர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், சோதனை சாவடியிலும், நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சோதனை பணிகளை துவக்கிவிட்டனர். பொதுமக்கள், வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்து செல்லலாம். இவ்வளவு தொகை தான் எடுத்து செல்லலாம் என அளவு எதுவும் கிடையாது; அரசியல் நோக்கத்திற்காக எடுத்து செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.
வாகன சோதனை திருச்சியில் துவக்கம்:
சட்டசபை தேர்தல் அறிவித்த இரண்டு மணி நேரத்தில், திருச்சி நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனையிட துவங்கினர். திருச்சி, கருமண்டபம் சோதனைச்சாவடியில், கலால் தாசில்தார் ஜெயபால் தலைமையில், போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அதேபோல், உய்யகொண்டான் திருமலை, குழுமணி சாலை, எடமலைப்பட்டிபுதுார், குடமுருட்டி பாலம், திருவானைக்காவல், அரியமங்கலம், சென்னை பைபாஸ் ரோடு உள்ளிட்ட, 9 சோதனைச்சாவடிகளிலும், நேற்று மாலை, 5:00 மணி முதல், வாகன சோதனை துவங்கியது. 'முதல் நாள் சோதனையில், எதுவும் சிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment