போலி ஆவணங்கள் தயாரித்து பணியில் சேர்ந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு இருகூரை சேர்ந்தவர் பார்த்திபன். கடந்த 2013-14ம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த இவர், தேர்வில் வெற்றி பெற்றதாக போலி ஆவணங்கள் தயார் செய்து விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே பிரமகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக கடந்த டிசம்பர் 16-ம் தேதி பணியில் சேர்ந்தார்.
இதே போல், ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடா நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சுமதி என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார ஆசிரியராக கடந்த டிசம்பர் 19-ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் இவர்களது ஆவணங்களை ஆய்வுசெய்தபோது இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்துப் பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பார்த்திபன், சுமதி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
4 பிரிவுகளில் வழக்கு
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் இல்லோடு ராஜி, பிரமகுண்டம் பேபிகிளாரா ஆகியோர், சுமதி, பார்த்திபன் மீது விழுப்புரம் எஸ்பி நரேந்திரன் நாயரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment