பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பு பணி; விடைத்தாள் திருத்தும் பணி; 'டிஸ்லெக்சியா ' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பணி என, ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'கட்டகங்கள்' எனப்படும் பயிற்சி கையேடு தயாரிப்பது குறித்து, 10 நாள் பயிற்சி முகாமை, ஆர்.எம்.எஸ்.ஏ., அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச், 17 முதல், மாநிலம் முழுவதும் இந்த பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில் பங்கேற்க வரும்படி, சமூக அறிவியல் ஆசிரியர்கள் திடீரென கட்டாயமாக அழைக்கப்பட்டதால், தேர்வு பணி மற்றும் பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடம் எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு வந்து விட்ட நிலையில், பயிற்சியே கண்ணாய் இருக்கும் அதிகாரிகளின் நிலையை நினைத்து, தலைமை ஆசிரியர்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 'அதிகாரிகளே... உங்கள் கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?' என, மனம் நொந்தபடி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment