ஒன்பதாம் வகுப்பு வரையில், மூன்றாம் பருவத்துக்கான பாடங்களில், பாதிக்கூட நடத்தாத நிலையில், ஆசிரியர்கள் தேர்வு பணியில் தீவிரமாகிவிட்டனர். பாடங்கள் நடத்தப்படாமலேயே, தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையில், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டாம் பருவத்தேர்வு, டிசம்பரில் நடத்தப்பட்டு, ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு கல்வியாண்டில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால், இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி மாதம் இறுதிவரை நடத்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில்தான், மூன்றாம் பருவத்துக்கான பாடங்கள் நடத்தவே தொடங்கினர். மார்ச் 4ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியதால், தேர்வு மைய பள்ளிகளில் பாதிநாள் விடுமுறை, ஆசிரியர்கள் தேர்வு பணிகளுக்கு செல்வதால், பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமை ஆகிய காரணங்களால், தற்போது பள்ளிகளில் பாடம் நடத்தப்படுவது இல்லை.
தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு, விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் உள்ளிட்டவையும் இருப்பதால், இனி ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாது. மூன்றாம் பருவத்தில், பாதி பாடங்களை கூட, அரசு பள்ளிகளில் நடத்தி முடிக்கவில்லை. ஆனால், அடுத்த மாதத்தில் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடங்களை நடத்தாமலேயே, அதில் தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒரு பருவத்துக்கான பாடங்கள், மூன்று மாதங்களுக்கு வகுப்பு எடுப்பதற்கேற்ப தயாரிக்கப்பட்டவை. ஆனால், இம்முறை, ஒருமாதம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் பாதி பாடங்கள் கூட முடிக்க முடியவில்லை. தேர்வு பணி, தேர்தல் பணி என பல்வேறு பணிகள் வந்துவிட்டதால், பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
அவர்கள் அனைத்து வகுப்புகளையும் மேற்பார்வை செய்யவே நேரம் போதாது. இரண்டாம் பருவத்துக்கான கால அவகாசத்தை நீட்டித்ததால், மூன்றாம் பருவத்தில், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment