தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வேளாண்மை, சாலைப் போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சிதிட்டங்கள் என்று தமிழகம் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள், இந்திய அளவில் பல மாநிலங்களில் முன்னோடி திட்டங்களாகவே உள்ளன.ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு, இந்திய ஆட்சிப் பணி தேர்வு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ் போன்றவற்றில், தமிழக மாணவர்களின் சேர்க்கையும் வேலைவாய்ப்பும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவே.
சென்ற ஆண்டு நடைபெற்ற, ஐ.ஐ.டி.,க்கான, ஜே.இ.இ., தேர்வில், இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்கள், நம் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தினர் தான். தேர்வெழுதிய, 1.54 லட்சம் மாணவர்களில், ஆந்திராவில் இருந்து மட்டும், 21,818 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான மத்திய அரசின் இந்த நுழைவுத் தேர்வில், இரண்டாம் இடத்தை, உ.பி., மாநிலமும் - 19,409 பேர், மூன்றாம் இடத்தை ராஜஸ்தான் மாநிலமும் - 16,867 பேர், நான்காம் இடத்தை மஹாராஷ்டிரா மாநிலமும் - 13, 626 பேர், ஐந்தாம் இடத்தை பீஹார் மாநிலமும் - 10,987 பேர், பிடித்துள்ளன.
மொத்த இடங்களில், 53.3 சதவீத இடங்களை, இந்த ஐந்து மாநில மாணவர்களே பிடித்து உள்ளனர். இந்த நுழைவுத் தேர்வு முடிவில், இன்னொரு சுவாரசியமான செய்தியும் உள்ளது. பீஹார் மாநிலத்தின் கயாவிற்கு அருகே உள்ள பங்கரான் என்ற ஒரு கிராமத்தில் இருந்து மட்டும், 26 மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ஒவ்வோராண்டும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து, அதிக அளவிலான மாணவர்கள் தேர்வாவது வழக்கம். அந்த ஊரின் சூழல் பற்றி இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம். 10 ஆயிரம் பவர் லுாம் இயந்திரங்கள் ஓடும் அந்த ஊரில், எப்போதும் ராட்சச சத்தம் கேட்ட படியே தான் இருக்கும். அந்த சத்தத்தை தங்களுக்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்டனர் அந்த ஊர் மாணவர்கள். நாம் இன்னும் இந்த வாக்கியத்தை உணர்ச்சிப்பூர்வமான வசனமாக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டோர் மொத்தம், 451 மாணவர்களே. அவர்களில், 33 பேர் மட்டுமே, மாநில பாடத்திட்டத்தில் படித்தோர். அடிப்படை வசதிகளிலும், ஏராளமான கல்வி தந்தைகளின் செல்வாக்கிலும் உயர்ந்திருக்கும் தமிழகத்தால், ஏன் மத்திய அரசின் பொதுத் தேர்வு களில் வெல்ல முடியவில்லை?அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில், முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாநிலங்களின் எழுத்தறிவு சதவீதத்தை, ஒப்பீட்டுக்காக கணக்கில் எடுத்துக் கொள்வோம். அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள் நிறைய உள்ள மாநிலம், பீஹார். அந்த மாநிலத்தில் எழுத்தறிவு, ௬௩.௮௨ சதவீதம் தான். அது தான் கடைசி.
அந்த மாநிலம் தான், அகில இந்திய தொழில்நுட்ப நுழைவுத் தேர்வில், ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரே கிராமத்தில் இருந்து, 26 மாணவர்களை, ஐ.ஐ.டி.,க்கு அனுப்புகிறது. இன்னும் சொல்லப் போனால், எழுத்தறிவு சதவீதத்தில் முதல்10 இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்களில்,கேரளாவைத் தவிர்த்து வேறெந்த மாநிலமும், அகில இந்திய தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கவில்லை.
நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஆந்திரப் பிரதேசம், எழுத்தறிவு சதவீதத்தில், 32வது இடம். உ.பி., 29, ராஜஸ்தான் 33, மஹாராஷ்டிரா 12வது இடம். 14வது இடத்தைப் பிடித்துள்ள தமிழகத்தில் இருந்து தான் வெறும், 451 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.பெண்களின் எழுத்தறிவிலும், தமிழகத்தின், 73.90 சதவீதம், இந்தியாவின் சராசரி, 65.46சதவீதத்தைக் தாண்டியுள்ளது. எழுத்தறிவுக்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதையே நுழைவுத் தேர்வு வெற்றிகள் மறைமுகமாகச் சொல்கின்றனவோ?மத்திய அரசின் அதிகாரம் மிக்கப் பணிகளுக்கு,
தமிழர்கள் செல்வது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில், கேரளா முன்னணி வகிக்கிறது. போபாலில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் சேரும், 100 மருத்துவ மாணவர்களில், சென்ற ஆண்டு, 57 பேர் மலையாளிகள். அவர்களுக்கு மலையாளத்தில் நுழைவுத் தேர்வு எழுத வாய்ப்பில்லாத நிலையிலும், இந்த வெற்றியை அவர்கள் பெற்றிருக்கின்றனர்.
இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் மட்டுமே, தமிழகம் தன் நிலையை முற்றிலும் இழக்காமல், கொஞ்சம் சோபித்துக் கொண்டிருக்கிறது.எ ந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழக மாணவர்கள் அகில இந்திய கல்வி மையங்களிலும், இந்தியக் குடிமைப் பணி உள்ளிட்ட மத்திய அரசின் பணிகளிலும், அதிக அளவில் தேர்வாக, அரசு உடனடியாக வழியறிய வேண்டும்.கல்வி மேம்பாடே சமூக மேம்பாடு; அதை நம் ஓட்டுகள் வலியுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment