மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், 2011 - 12ல், 1,590 முதுநிலை ஆசிரியர்கள்; 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப, பணியிட நீட்டிப்பு வழங்கப்படும்.இந்த பணியிட நீட்டிப்பு காலம், 2014 டிச., 31ல் முடிந்தது. ஓராண்டாக, ஒவ்வொரு மாதமும் பணி நீட்டிப்பு வழங்கி, கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்ட பிறகே, கருவூலத்தில் இருந்து சம்பளம் வாங்கும் நிலை உள்ளது.
ஆனால், அரசாணை பிறப்பிக்க தாமதமாவதால், சம்பளம் வாங்க, 5ம் தேதி வரை ஆகிறது. இதனால், வங்கிகளில் கடன் வாங்கி உள்ள ஆசிரியர்கள், அபராத வட்டி கட்டும் நிலை உள்ளது.
கிடப்பில் போடப்பட்ட கடிதம் இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் தேர்தல் பணி துவங்கி உள்ளது. தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை வரை, ஆசிரியர்களின் பணி முக்கியமானது. இந்த நேரத்தில், மாதந்தோறும் அரசாணை பிறப்பித்து சம்பளம் வாங்க காலதாமதமாகும். எனவே, முன்கூட்டியே பணியிட நீட்டிப்பு ஆணை வழங்க கோரிக்கை விடுத்தோம்.இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், '2015 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட நீட்டிப்பு செய்ய வேண்டும்' என, அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தலைமை செயலகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.
தேர்தல் முடியும் வரை, மூன்று மாதங்களுக்கு மட்டுமாவது, தொடர் பணி நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினார். அதையும் அரசு செயலர் அனுமதிக்காமல், பிப்ரவரி மாத சம்பளத்துக்கு மட்டுமே, அரசாணை பிறப்பித்துள்ளார். இதனால், 8,462 ஆசிரியர் குடும்பத்தினர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment