அரக்கோணம், நெமிலி வட்டாரங்களில் பணிபுரியும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அரக்கோணம் வட்டார தலைவர் சுதா பிரேம்குமார், செயலர் எபிநேசர், மாநில செயற்குழு உறுப்பினர் தேவராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் அரக்கோணம், நெமிலி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பிப்ரவரி மாத ஊதியம் சனிக்கிழமை (மார்ச் 12) வரை வழங்கப்படவில்லை.
எப்போதும், வருட இறுதியில் வருமான வரிக் கணக்கை நேர்செய்ய வேண்டி பிப்ரவரி மாத ஊதியம் இரு நாள்கள் தள்ளி வரவு வைப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வரவு வைக்கப்படவில்லை.
இதுகுறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும், அரக்கோணம் வட்ட கருவூல அலுவலகத்திலும் கேட்டபோது, விரைவில் ஊதியம் வரவு வைக்கப்படும் என தொடர்ந்து ஒரு வாரமாக இதே பதிலை அளித்து வருகின்றனர்.
இதனால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். சிலர், கடன் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலை மேலும் நீடித்தால் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பணிபுரிய சுணக்கமான நிலையும், ஆசிரியர் சங்கத்தினர் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடும்.
No comments:
Post a Comment