பொதுமக்கள் புகார் செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால், அரசு அலுவலகங்களுக்கு, அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளின் வருகை பெரிதும் குறைந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமலானதில் இருந்து, புதிய ஆட்சி அமைவது வரை, தேர்தலில் நேரடியாக தொடர்பு இல்லாத அரசுத் துறையினர், சற்று மெத்தனமாக இருப்பது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, பொதுமக்கள் புகார் செய்ததும், சம்பந்தப்பட்ட துறையினர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் இப்போக்கு, மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இது குறித்து, பல்வேறு துறை ஊழியர்கள் கூறியதாவது:தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணி ஆணை தரப்பட்ட சாலைகள், அவசர அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அது, ஒரு புறம் இருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கை யுடன் தொடர்புடைய துறைகள் தொடர்பான புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இதற்கு, உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவே காரணம்.
குறிப்பாக, மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் துறை அதிகாரிகள், கவனமாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மின் துறை ஊழியர்களையும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, அரசுத் துறைகள் மீது அதிருப்தி ஏற்படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment