தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் ஆகின்றனர். இதற்கு, ஊழல் மலிந்த உயர்கல்வித்துறையே காரணம். பல்கலைகளும், கல்லுாரிகளும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளின் படியே செயல்பட்டு, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக, யு.ஜி.சி., விதிகளை துச்சம் என துாக்கி வீசி விட்டு, பல்கலைகளும், கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
பேராசிரியரில் துவங்கி, துணைவேந்தர் நியமனம் வரை, தகுதியற்றவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியராக, 10 ஆண்டு அனுபவம் பெற்றவரையே, துணைவேந்தராக்க வேண்டும். ஆனால், இணை பேராசிரியரும், அனுபவம் இல்லாத பேராசிரியர் பலரும் துணைவேந்தராகி உள்ளனர். இதற்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுமே காரணம்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரிய மான, டி.ஆர்.பி., மூலம், 1,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில், உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை. யு.ஜி.சி.,யின், 2009 மற்றும், 2010 நெறிமுறைகளை, தமிழக பல்கலைகளில், ஆறு ஆண்டுகளாகியும் அமல்படுத்தவில்லை.
அதனால், பல பல்கலைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நிறுத்தப்பட்டு, பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், நிதி நெருக்கடி உள்ளது. மதுரை தியாகராஜா கல்லுாரியில் மட்டும், 20 பேருக்கு பல மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை.
மதுரை காமராஜர் பல்கலையில், எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு, கடலியல் படித்தவரும், இளைஞர் நலன் துறைக்கு, நிர்வாகவியல் படித்தவர்களும் பேராசிரியராகியுள்ளனர். திருவள்ளூர் பல்கலையில், பெரும்பாலான பேராசிரியர்களுக்கு தகுதியே இல்லை என, நீதிமன்றத்தில், யு.ஜி.சி., கூறியுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் பேராசிரியர்களை நியமிக்கவும், முறைகேடுகள் நடக்கின்றன. முறைகேட்டுக்கு துணை போகாத கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்க வில்லை. அதனால், 4,000 பணியிடங்களில் ஆசிரியர்கள் இல்லை. பல பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல், பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு வைத்து தகுதி பார்க்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யில் மறைமுக சிபாரிசுப்படி நியமனம் நடந்துள்ளதால், பல கல்லுாரி ஆசிரியர்கள் பள்ளிப் படிப்பை கூட கற்பிக்க முடியாதவர்களாக உள்ளனர்.பல்கலைகள், &'ரெகுலர்&' வகுப்புகளையும், தொலைதுார வகுப்புகளையும் நடத்த, பல விதிமுறைகள் உள்ளன. தொலைதுார கல்வியில் தனியார் ஏஜன்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது என, கட்டுப்பாடு உள்ளது.
ஆனால், பல பல்கலைகள் பெட்டிக் கடை போல், தனியார் ஏஜன்சிகள் மூலம், வகுப்புகளை நடத்துகின்றன. பல்கலை மற்றும் கல்லுாரிகளில் தங்கள் விருப்பத்துக்கு, கல்வி கட்டணத்தை உயர்த்துகின்றனர்.
உதாரணமாக, கோவையில் உள்ள பாரதியார் பல்கலை, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனம் மூலம், ரெகுலர் கல்லுாரியை நடத்துகிறது. ஆனால், தொலைதுார கல்வி போல், வார விடுமுறை நாட்களில் தான் பாடம் நடத்துகின்றனர். இதுபோன்ற கல்லுாரிகளின் பட்டங்கள் செல்லாது என, மாணவர்களுக்கு தெரியாது. அவர்கள் அரசு பணிகளில் சேரும் போதோ, அல்லது சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் போதோ தான், உண்மை தெரியும்.
தரமான பேராசிரியர்கள் மூலம் கற்பித்து பட்டம் வழங்குவதற்கு பதில், மாநிலத்தின் உயர்கல்வி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில், உயர்கல்வி செயல்படுவதால், எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர். ஆனால், இவற்றின் பெயரில் கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், பண ஒதுக்கீடு, பில் மட்டும், பாஸ் ஆகுது. பி.எட்., தனியார் கல்லுாரிகளில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு பெறவும், மாணவர் சேர்க்கை அனுமதி பெறவும், பல லட்சம் ரூபாய் வாங்கியதாக, கல்லுாரி முதல்வர்களே சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இப்படி, ஆயிரக்கணக்கில் முறைகேடுகளும், விதிமீறல்களும் உள்ளதால், லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், சுதந்திரமான விசாரணை நடத்தி, விதி மீறியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியர் ஏ.ஆர்.நாகராஜன்
No comments:
Post a Comment