பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க, ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடலுார் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், பொதுத் தேர்வு துவங்கும் முன்னரே, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்த பள்ளி மாநில, 'ரேங்க்' எடுப்பது; எந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெறுவது என, கடும் போட்டி உண்டு. இதற்காக, தேர்வு பணிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் பல வகை சிபாரிசுகள் தேர்வுத் துறைக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு தேர்வு பணிகளில் குளறுபடி, பொதுத் தேர்வு துவங்கும் முன், துவங்கி விட்டது.
கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மாவட்ட விடைத்தாள் திருத்தும் முகாமின் உதவி அலுவலராக பணி அமர்த்தப்பட்டார். இதற்காக, சென்னையில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணி பயிற்சியிலும் அவர் பங்கேற்றார்.ஆனால், திடீரென அவரது நியமனத்தை, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அந்த இடத்தில் வேறு ஆசிரியரை, சிபாரிசின் பேரில் நியமிக்க, அதிகாரிகள் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிரச்னைக்குரிய கடலுார் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்குளறுபடிகள் நடக்கும். குறிப்பிட்ட, ஒரு அரசு பள்ளி தேர்வு மையத்தில், மாணவர்கள் காப்பியடிக்க, அங்கு தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களே உதவுவதாக, பல முறை புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், ஆசிரியர் ஒருவரின் மகன், காப்பியடித்து பிடிபட்டார். இது குறித்து, தற்போதைய தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி விசாரணை நடத்தினார்என்பது குறிப்பிடத்தக்கது.
அழுத்தம் தருகின்றனர்:அரசியல் செல்வாக்குள்ள சிலர், குறிப்பிட்ட தேர்வுத்தாள் திருத்தும் மையப் பணியை கேட்டுள்ளனர். மேலிட பெயரைச் சொல்லி, சிலரை தேர்வு மையம் மற்றும் விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு பணியில் அமர்த்த அழுத்தம் அளித்து வருகின்றனர்.
தேர்வுத்துறை வட்டாரங்கள்
சந்தேகம் தருகிறது:தேர்வு பணிகளில், பாரபட்சமின்றி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தின் முக்கிய பணியில் ஆசிரியர் ஒருவரை நியமித்து, பயிற்சியும் அளித்த பின், திடீரென அவரை நீக்கம் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிகாரிகள் எந்த சிபாரிசையும் ஏற்காமல், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு தேர்வு பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்
No comments:
Post a Comment