பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான அட்டவணையில் தமிழ்ப் பாடத்துக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அதற்கு பயிற்சி அளிக்க கூடுதல் நாள்கள் ஒதுக்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அக்கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர் மீ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு கால அட்டவணையில், தமிழ் முதல்தாள் மார்ச் 15ஆம் தேதியும், இரண்டாம் தாள் மார்ச் 16ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களைப் போல, தமிழ் இரண்டாம் தாளுக்கு பயிற்சி அளிக்க இடையே விடுமுறை நாள்கள் இல்லை.
அதேநேரம், ஆங்கிலம் முதல் தாளுக்கு 5 நாள்களும், ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு 6 நாள்களும் இடையில் விடுமுறை நாள்கள் உள்ளன.
இதேபோன்று, தமிழ்த் தேர்வுக்கு போதிய நாள்கள் விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவே, பள்ளி நாள்களான மார்ச் 10ஆம் தேதி முதல் தமிழ்ப் பாடத்துக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் உத்தரவிட வேண்டும்.
மேலும், தமிழ் வினாத்தாள் எளிமையாக இல்லாத காரணத்தால், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாணவர்கள் தோல்வியை சந்திக்கும் நிலை உள்ளது.
இதைத் தவிர்க்க, தமிழ் வினாத் தாள்களில் மாற்றம் செய்யவேண்டும் அல்லது அரசுப் பொதுத் தேர்வு கால அட்டவணையில் தமிழ்ப் பாடத்துக்கு பயிற்சி அளிக்கும் வகையில் விடுமுறை நாள்கள் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment